தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் (டான்ஜெட்கோ) ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிந்த இருவர் 2024 -ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அன்று திருச்சி கே.கே.நகரில் ஓலையூர் வட்டச் சாலை அருகே உயர் அழுத்த மேல்நிலை மின் கம்பியை பழுதுபார்க்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
ஊடகத்தில் வெளியான தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், மின்சாரத் துறையின் தரப்பில் ஒட்டுமொத்த அலட்சியம் காரணமாக இரண்டு ஒப்பந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளது கவலைக்குரிய விஷயம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன என்றும், இது ஒரு மனித உரிமை மீறல் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நிலை, உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டிருந்தால் அது குறித்தும் இந்த விசாரணையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் தாக்கல் செய்யுமாறு ஆணையம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பழுதுபார்க்கும் பணியின் போது, மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்படவில்லை என்பதும், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மின்மாற்றியை பழுது பார்க்கும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். கடந்த மாதம், பெஃங்கல் புயலின் போது தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும், அவரது உடல் முத்தியால்பேட்டையில் உள்ள தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம் அருகே கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
திவாஹர்