புதுதில்லியில் உள்ள வர்த்மான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் இன்று (டிசம்பர் 23, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மருத்துவத் தொழில் என்பது வாழ்வாதாரம் மட்டுமின்றி, மக்களின் துன்பங்களைக் குறைப்பது, நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளிப்பது, சமூகத்தின் நல்வாழ்வுக்கு பங்களிப்பது ஆகிய புனிதமான கடமைகளையும் கொண்டுள்ள தொழிலாகும் என்று கூறினார். மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்களாக, மக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மருத்துவ வல்லுநர்களுக்கு பொறுப்பு உள்ளது.
மருத்துவர்களிடம் வரும் நோயாளிகள் பயத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் மனிதர்கள். எனவே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மட்டுமின்றி, ஊக்கமும் தேவைப்படுகிறது. ஆகையால் மருத்துவர் நோயைக் குணப்படுத்துவராக மட்டுமின்றி, இரக்க குணம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மருத்துவத் துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக மருத்துவம், பொறியியல் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பின் அவசியம் குறித்தும் குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு, மெசெஞ்சர் ஆர்.என்.ஏ தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், முப்பரிணாம உயிரி அச்சு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மருத்துவத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில், ‘சுகாதாரமான இந்தியாவை’ உருவாக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.
எம்.பிரபாகரன்