இந்தியா- இலங்கை இடையே இருதரப்பு கடற்படை பயிற்சி விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 17-ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. கிழக்கு கடற்படை தலைமையின் கீழ் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது . இதில்
இந்தியா சார்பில் கிழக்கு கடற்படையைச் சேர்ந்த ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பலும் இலங்கை கடற்படையின் சார்ஜ், சயுரா போர்க்கப்பல்களும் பங்கேற்றன.
இந்தக் கூட்டுக் கடற்பயிற்சியின் தொடக்க விழா 2024-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி நடைபெற்றது, அதைத் தொடர்ந்து இரு நாடுகளின் கடற்படை அதிகாரிகள், தொழில்முறை, சமூகப் பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு நாட்டு கடற்படைகளின் கூட்டுப் பயிற்சிகளில் தகவல் தொடர்பு நடைமுறைகள், கடல்சார் ஒத்திகைகள், ஹெலிகாப்டர் பயன்பாடு போன்ற பல்வேறு பயிற்சிகள் உள்ளடங்கி இருந்தன.
2005-ம் ஆண்டில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தக் கூட்டுக் கடற்படை பயிற்சி இரு நாடுகளின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் கடல்சார் விதிமுறைகளை உருவாக்கவும், இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தவும் உதவியுள்ளது.
எம்.பிரபாகரன்