போலி மருந்துகளுக்கு எதிராக மத்திய சுகாதார அமைச்சகம் விரைவான நடவடிக்கை எடுக்கிறது; கொல்கத்தாவில் மிகப்பெரிய அளவில் பறிமுதல்.

போலி மருந்துகளின் சட்டவிரோத வர்த்தகத்திற்கு எதிரான ஒரு தீவிரமான நடவடிக்கையாக, கொல்கத்தாவில் உள்ள மொத்த விற்பனை வளாகத்தில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ), கிழக்கு மண்டலம் மற்றும் மேற்கு வங்கத்தின் மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஆகியவற்றால் கூட்டு விசாரணை நடத்தப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள கேர் அண்ட் க்யூர் ஃபார் யூ நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில், போலி என சந்தேகிக்கப்படும் ஏராளமான புற்றுநோய் எதிர்ப்பு, நீரிழிவு எதிர்ப்பு மற்றும் பிற மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

அயர்லாந்து, துருக்கி, அமெரிக்கா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் எனப் பெயர் பொறிக்கப்பட்ட இந்த மருந்துகள், இந்தியாவில் சட்டப்பூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இல்லை என்பது தெரிய வந்தது. அத்தகைய ஆவணங்கள் இல்லாத நிலையில், இந்த மருந்துகள் போலியானவை என்றே கருதப்படுகிறது. விசாரணைக் குழு பல வெற்று பேக்கிங் பொருட்களையும் கண்டுபிடித்தது. மேலும் கைப்பற்றப்பட்ட பொருட்களின் நம்பகத்தன்மை  குறித்தும் சந்தேகம் எழும்பியுள்ளது.

கைப்பற்றப்பட்ட  மருந்துப் பொருட்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ. 6.60 கோடி. முறையான விசாரணையை உறுதி செய்வதற்காக, மருந்துகளின் மாதிரிகள் தர பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள கைப்பற்றப்பட்ட மருந்துகள் சி.டி.எஸ்.சி.ஓ-ஆல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

விசாரணையின் விளைவாக, மொத்த விற்பனை நிறுவனத்தின் உரிமையாளராக அடையாளம் காணப்பட்ட ஒரு பெண், கிழக்கு மண்டலத்தின் சி.டி.எஸ்.சி.ஓ.வின் மருந்து ஆய்வாளரால் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்து மேலும் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதில் பொறுப்புடைமையுடன் உள்ளது.  கொல்கத்தாவில் நிகழ்ந்த இந்த  பறிமுதல் விசாரணை, போலி மற்றும் தரமற்ற மருந்துகளை சந்தையில் புழக்கத்தில்  விடுவதற்கு எதிரான அரசின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Leave a Reply