கேஎல்இ புற்றுநோய் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

கர்நாடக மாநிலம் பெலகாவியில் கேஎல்இ புற்றுநோய் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜனவரி 3, 2025) திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் , உலகளாவிய ஆய்வின்படி, உலகில் இறப்புக்கு புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று கூறினார். 2022-ம் ஆண்டில், உலகளவில் 20 மில்லியன் புதிய புற்றுநோயாளிகள் இருந்ததாகவும் 9.7 மில்லியன் இறப்புகள் புற்றுநோயால் ஏற்பட்டதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 100 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வின்படி, 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025-ம் ஆண்டில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு சுமார் 13 சதவீதம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

புற்றுநோயாளிகளின் உடல் மற்றும் உளவியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விரிவான கவனிப்பை வழங்குவது சுகாதார நிபுணர்களின் கடமை என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். ஒரு மருத்துவர் கருணையுடனும் அனுதாபத்துடனும் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் அவரது நோயாளியின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார் .

புற்றுநோய்க்கான காரணங்கள், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியன குறித்து அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார் . நோயாளி மற்றும் குடும்பத்தினரின் அறியாமை காரணமாகவோ அல்லது நிதிப் பற்றாக்குறை காரணமாகவோ, நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்படும் பல நிகழ்வுகளை நாம் காண்கிறோம். ஆபத்தான புற்றுநோய் போன்ற நோய்களுக்கு எதிரான போராட்டம் ஒரு கூட்டு முயற்சி என்று அவர் கூறினார். உலகத் தரம் வாய்ந்ததாக இருப்பதோடு, நோயாளிகளை மையமாகக் கொண்டதாகவும் அனைவரையும் சமமாக நடத்தும் மற்றும் உலகத் தரத்தில் சுகாதார முறையை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சில குடும்பங்களில் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்தை விட ஆண் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை நாம் காண்கிறோம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்த மாறுபட்ட அணுகுமுறை ஆண்கள் மற்றும் பெண்களைப் பாகுபடுத்தும் நிலையை ஏற்படுத்துகிறது. பல நேரங்களில்,  குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்கள் தங்கள் உடல்நலப் பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில்  சிகிச்சையைப் பெறுவதில்லை. இதுபோன்ற எந்தவொரு தாமதமும், குறிப்பாக புற்றுநோய் விஷயத்தில் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் கூறினார்.  பெண்கள் தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு குடும்பமும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குடும்பம் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பெண்களின் ஆரோக்கியத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களை கவனித்துக்கொள்வதிலும், அவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையைப் பெறுவதற்கு உதவுவதிலும் தாமாகவே முன்வந்து பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply