புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கிராமப்புற பாரத மஹோத்சவ் 2025 என்னும் பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். வளர்ச்சியடைந்த பாரதம் 2047- க்கு ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குவது இந்தப் பெருவிழாவின் கருப்பொருளாகும். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமப்புற பாரதப் பெருவிழா என்ற பிரம்மாண்டமான அமைப்பு, இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு பார்வையை அளித்து, அதற்கான அடையாளத்தை உருவாக்குகிறது என்று அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நபார்டு மற்றும் அதன் கூட்டுறவு அமைப்புகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
கிராமங்களில் பிறந்து வளர்ந்த நாம் அனைவரும் கிராமங்களின் திறனை அறிவோம் என்று பிரதமர் குறிப்பிட்டார். கிராமத்தின் உணர்வு கிராமங்களில் வசிப்பவர்களிடமும் உள்ளது என்று அவர் கூறினார். கிராமங்களில் வசிப்பவர்களுக்கு ஒரு கிராமத்தின் உண்மையான வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பது தெரியும் என்று அவர் மேலும் கூறினார். எளிமையான சூழல் கொண்ட ஒரு சிறிய நகரத்தில் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தது தனது அதிர்ஷ்டம் என்று திரு மோடி கூறினார். பின்னர் நகரத்தை விட்டு வெளியேறியபோது கிராமப்புறங்களில் நேரத்தை செலவிட்டதாக அவர் கூறினார். “நான் சிரமங்களை அனுபவித்தேன், கிராமத்தின் சாத்தியக்கூறுகளையும் நான் அறிவேன்” என்று பிரதமர் கூறினார். கிராம மக்கள் கடின உழைப்பாளிகளாக இருந்தாலும், மூலதனம் இல்லாததால் அவர்கள் சரியான வாய்ப்புகளை இழக்கிறார்கள் என்பதை குழந்தைப் பருவத்திலிருந்தே கவனித்து வருவதாக அவர் கூறினார். கிராம மக்கள் பல்வேறு துறைகளில் பலதரப்பட்ட பலங்களைக் கொண்டிருந்தாலும், அவர்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கான தேடலில் அவர்கள் அவற்றை இழக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். இயற்கை பேரழிவுகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சந்தை வாய்ப்புகள் இல்லாமை போன்ற பல்வேறு சவால்கள் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இவை அனைத்தையும் பார்த்த பிறகு, தனது மனதில் உறுதியாக இருந்ததாகவும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க ஊக்கமளித்ததாகவும் அவர் கூறினார். கிராமப்புறங்களில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் கிராமங்களில் இருந்து பெறப்பட்ட படிப்பினைகள் மற்றும் அனுபவங்களால் உத்வேகம் பெற்றவை என்று அவர் மேலும் கூறினார். 2014-ம் ஆண்டு முதல் தான் தொடர்ந்து கிராமப்புற இந்தியாவின் சேவையில் ஈடுபட்டு வருவதாக திரு மோடி கூறினார். “கிராமப்புற இந்திய மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே எனது அரசின் முன்னுரிமை” என்று பிரதமர் கூறினார். அதிகாரம் பெற்ற கிராமப்புற இந்தியாவை உறுதி செய்வது, கிராமவாசிகளுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்குவது, இடப்பெயர்வைக் குறைப்பது, கிராம மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வது ஆகியவை அவர்களின் தொலைநோக்குப் பார்வை என்றும் அவர் கூறினார். எனவே, ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை வழங்கப்பட்டதையும், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புற இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு உறுதியான வீடுகள் வழங்கப்பட்டதையும், ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான வீடுகளுக்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் உறுதி செய்யப்பட்டதையும் திரு மோடி பட்டியலிட்டார்.
“இன்று, 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களில் மக்களுக்கு சுகாதார வசதிகள் வழங்கப்படுகின்றன” என்று பிரதமர் கூறினார். தொலை மருத்துவம், டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் உதவியுடன், கிராமங்களுக்கு சிறந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார். இ-சஞ்சீவினி மூலம் கிராமப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொலை மருத்துவம் மூலம் பயனடைந்துள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், இந்தியாவின் கிராமங்கள் எவ்வாறு சமாளிக்கும் என்று உலகமே வியப்படைந்தது என்று திரு மோடி குறிப்பிட்டார். எவ்வாறாயினும், ஒவ்வொரு கிராமத்திலும் கடைசி நபருக்கும் தடுப்பூசிகள் சென்றடைவதை அரசு உறுதி செய்தது என்று அவர் மேலும் கூறினார்.
கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த கிராமப்புற சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் கருத்தில் கொள்ளும் வகையில் பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். கடந்த 10 ஆண்டுகளில், கிராமத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அரசு சிறப்புக் கொள்கைகளை வகுத்து முடிவுகளை எடுத்துள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், டிஏபி-க்கான மானியத்தை தொடரவும் முடிவு செய்ததாகவும் திரு மோடி குறிப்பிட்டார். அரசின் நோக்கங்கள், கொள்கைகள் மற்றும் முடிவுகள் கிராமப்புற இந்தியாவில் புதிய சக்தியை அளிக்கின்றன என்று அவர் வலியுறுத்தினார். கிராமங்களுக்குள்ளேயே கிராமவாசிகளுக்கு அதிகபட்ச பொருளாதார உதவிகளை வழங்கி, அவர்கள் விவசாயத்தில் ஈடுபடவும், புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வேண்டும் என்ற இலக்கை பிரதமர் சுட்டிக் காட்டினார். பிரதமரின் கிசான் வெகுமதி நிதி மூலம் விவசாயிகள் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியைப் பெற்றுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் விவசாயக் கடன்களின் அளவு 3.5 மடங்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட திரு மோடி, தற்போது கால்நடை மற்றும் மீன் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இது தவிர, நாட்டில் 9,000-க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் நிதியுதவி பெறுகின்றன என்றும் அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் பல பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு தொடர்ந்து அதிகரித்துள்ளது என்பதை அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
எஸ். சதிஸ் சர்மா