தமிழக அரசு 2023, 2024 வடகிழக்கு பருவமழைக்கும், காலநிலை மாற்றத்தால் பெய்த மழைக்கும், காவிரியில் நீர் திறக்காததால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை சரி செய்யும் வகையிலும், விவசாயிகளின் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையிலும் நிதியை ஒதுக்கி தர வேண்டும்.
2023 பருவமழை, காலநிலை மாற்றத்தால் 2024 ஜனவரியில் பெய்த மழை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் மறுவாழ்வு நிதி(SDRF) யிலிருந்து நிவாரண உதவிக்காக ரூ. 67,90,28,075 ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தொகை போதுமானதல்ல என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற 22 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை மற்றும் 2024 ஜனவரியில் பெய்த காலநிலை மாற்றத்தால் பெய்த மழையால் பெரும்பாலான விவசாயப் பயிர்கள் சேதமடைந்தன. இவற்றிற்கான நிவாரணத்தொகையும் வழங்க ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆனால் தேவையான நிதியை ஒதுக்காமல், ஹெக்டேர் ஒன்றுக்கு 17,000 ரூபாயும், மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 8,500 ரூபாயும் ஒதுக்கியது போதுமானதல்ல.
மேலும் 2024 ஜனவரியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதும் சேதமுற்ற நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாயும், சேதமுற்ற மானாவாரி பயிர்கள், தோட்டப்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயும் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்த வேலையில் இப்போது வெளிவந்திருக்கும் அரசாணையால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதே போல உரிய நேரத்தில் காவிரி ஆற்றின் தண்ணீர் திறக்காமல் போனதால் கருகிய பயிர்களுக்கும் நிவாரணத் தொகை அறிவிக்கவில்லை. தற்போதைய அறிவிப்பில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணத் தொகை பற்றிய அறிவிப்பு இடம் பெறவில்லை என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
இச்சூழலில் கடந்த 2024 பெஞ்சல் புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு குறிப்பாக கடலை, உளுந்து, சோளம், வெங்காயம் ஆகிய பயிர்களுக்கான இழப்பீட்டை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.
எனவே தமிழக அரசு பருவ மழையாலும், பருவம் தவறிய மழையாலும், இயற்கைச் சீற்றத்தாலும் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணத்தொகையை வழங்க நிதியை ஒதுக்கி, காலத்தே வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்…
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா