ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று (ஜனவரி 10, 2025) நடைபெற்ற 18-வது வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் நமது நாட்டின் சிறந்த பிரதிநிதிகள் என்று கூறினார். இந்தப் புனித பூமியில் பெறப்பட்ட அறிவு மற்றும் திறன்களை மட்டும் அவர்கள் தங்களுடன் எடுத்துச் செல்லவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாகரிகத்தின் அடித்தளமாக விளங்கிய விழுமியங்களையும் நெறிமுறைகளையும் அவர்கள் தங்களுடன் எடுத்துச் சென்றுள்ளனர். தொழில்நுட்பம், மருத்துவம், கலை அல்லது தொழில்முனைவு ஆகிய துறைகளில் இந்திய வம்சாவளியினர் உலகம் அங்கீகரிக்கும் மற்றும் மதிக்கும் வகையில் ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விருது பெற்ற அனைவருக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். அவர்களின் வெற்றிக் கதைகள் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதுடன் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானோர் மேன்மையுடன் வாழ்வதற்கு ஊக்குவிப்பதாகவும் அவர் கூறினார். டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசின் அதிபர் கிறிஸ்டின் கங்காலூவுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், பெண்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, தனது நாட்டை வழிநடத்துவதில் அவரது சிறந்த பங்களிப்பு உலக அரங்கில் உயர்ந்த அளவுகோலை அமைத்துள்ளது என்று கூறினார்.
வெளிநாடுவாழ் இந்தியர் தினம் என்பது வெறும் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், அதற்கும் மேலானதாக மாறியிருப்பது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். சிந்தனைகள் ஒன்றிணைவதற்கும், ஒத்துழைப்புகளை உருவாக்குவதற்கும், இந்தியாவிற்கும் அதன் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் இது ஒரு தளம் என்று அவர் தெரிவித்தார்.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்பதை நோக்கி நமது நாடு இன்று நடைபோட்டு வருகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இது ஒரு தேசிய இயக்கம் என்றும், இதற்கு வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உட்பட ஒவ்வொரு இந்தியரின் ஆக்கப்பூர்வமான, உற்சாகமான பங்கேற்பு தேவை என்றும் அவர் கூறினார். இந்தத் தொலைநோக்கு பார்வையின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்திய வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்ளனர் என்று அவர் கூறினார். அவர்களின் உலகளாவிய இருப்பு அவர்களுக்கு ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை அளிக்கிறது. மேலும் அவர்களின் சாதனைகள் வளர்ந்த இந்தியாவை நனவாக்குவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக உள்ளன.
இந்தியாவின் காலத்தால் அழியாத தத்துவமான உலகமே ஒரு குடும்பம் பற்றி குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், நமது தேவைகளை பூர்த்தி செய்வதுடன் மட்டுமின்றி, உலக நலனுக்கும் பங்களிக்கும் சூழலை உருவாக்குவதே இந்தத் தொலைநோக்குப் பார்வை என்று கூறினார். பொருளாதார முன்னேற்றத்தை சமூக நீதி மற்றும் சுற்றுச்சூழல் மேற்பார்வையுடன் சமநிலைப்படுத்தி, எதிர்வரும் தலைமுறைகளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் ஒரு தேசமாக இருக்க நாங்கள் விரும்புகிறோம். இந்த தொலைநோக்கு பார்வையை அடைவதில் இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
நமது வெளிநாடுவாழ் இந்தியர்கள் குடும்பத்தின் சாதனைகளை நாம் கொண்டாடும் அதே வேளையில், நாம் எதிர்காலத்தை நம்பிக்கையுடனும், உறுதியுடனும் எதிர்நோக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார் . உலக அரங்கில் நிமிர்ந்து நிற்பதுடன், உலகிற்கு ஒளியின் கலங்கரை விளக்கமாகத் தொடர்ந்து திகழும் ஒரு நாடாக, வளர்ச்சியடைந்த இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
திவாஹர்