ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் புத்தொழில்களில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும்!-மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்.

அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங், இளைஞர் விவகாரங்கள்- விளையாட்டு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “தேசிய இளைஞர் விழா 2025”-ன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100 மாணவர்கள் கொண்ட குழுவுக்கு இரவு விருந்தளித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி தங்களது புதுமையான யோசனைகளை செயல் நடவடிக்கைகளாக மாற்றுவதற்கான தளமாக இந்த விழாவை பயன்படுத்திக் கொள்ள இளம் பங்கேற்பாளர்களை ஊக்குவிப்பதே இந்த கலந்துரையாடலின் நோக்கமாகும்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், புத்தொழில் வாய்ப்புகளுக்கான பிராந்திய ஆதாரங்களை ஆராய்ந்து அதில் அதிகம் ஈடுபடுமாறு ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் சார்ந்த முன்முயற்சிகளின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார். தேசிய இளைஞர் விழா 2025 போன்ற திட்டங்கள் இளம் தனிநபர்களுக்கு இணையற்ற தேசிய தளத்தை வழங்குகின்றன என்று அவர் கூறினார்.

மாணவர்களின் உற்சாகம், ஈடுபாட்டைப் பாராட்டிய அமைச்சர், அவர்களின் பங்கேற்பு ஜம்மு-காஷ்மீர், லடாக்கின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது என்பதை எடுத்துரைத்தார். இளைஞர்களிடையே புதிய கண்டுபிடிப்புகளையும், தொழில்முனைவையும் ஊக்குவிப்பதற்காக அறிவியல்- தொழில்நுட்ப அமைச்சகம் மேற்கொண்டுள்ள பல்வேறு முன்முயற்சிகளை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்.

Leave a Reply