கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ECR சாலையில் குடும்பத்துடன் காரில் பயணித்த பெண்களை, திமுக கொடி பொருந்திய காரில் சிலர் விரட்டி வந்ததும், மூர்க்கத்தனமான உடல் மொழிகளால் அப்பெண்களை அவர்கள் அச்சுறுத்தியதும் தெளிவாக பதிவான காணொளி வெளியாகியிருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டிய காவல்துறை வழக்கம் போல கழக உடன்பிறப்புகளைக் காப்பாற்றுவதிலேயே முனைப்பாக செயல்படுவது ஏன்? அறிவாலயத்தின் கைக்கூலியாகவே மாறிவிட்டதா தமிழகக் காவல்துறை?
நடந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை இன்னும் கைது செய்யாமல், அப்பெண்கள் மீது தான் தவறு என்று கூறுகிறது காவல்துறை, ஆனால் அதை அடியோடு மறுக்கிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள். வழக்கு விசாரணையில் இருக்கும்போதே காவல்துறை எவ்வித ஆதாரமுமின்றி குற்றவாளிகளுக்கு முட்டுக்கொடுப்பது ஏன்? கழக உடன்பிறப்புகள் மீது அப்படியென்ன அளவு கடந்த பாசம்?
மேலும், அண்ணா பல்கலைக் கழகத்தில் திமுக அனுதாபியால் பாதிக்கப்பட்ட பெண்ணின் FIR-ஐ வெளியிட்டது போல, ECR சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களையும் வெளியிட்டதன் நோக்கம் என்ன? ஆளும் கட்சியை எதிர்த்து புகார் கொடுப்பவர்களுக்கான பகிரங்க மிரட்டலா இது? ஆளும் கட்சியான திமுக குண்டர்களால் அப்பெண்களுக்கு ஏதேனும் சிக்கல் உண்டாகுமாயின் யார் பொறுப்பேற்பது?
இவ்வாறு பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்