மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங், 14வது ஆசிய மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின மன்றத்தை புதுதில்லியில் உள்ள பூசா வளாகத்தில் இன்று தொடங்கி வைத்தார். இது உலகளாவிய மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ராஜீவ் ரஞ்சன் சிங், நிலையான மீன்வளத்திற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். பிரதமரின் தொலைநோக்கு தலைமை மற்றும் பிரதமரின் மீன்வளர்ப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக வளர்ச்சியடைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கடலில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தேசிய மின்னணு மீன்வள தளம் மற்றும் கப்பல் கண்காணிப்பு, டிரான்ஸ்பாண்டர்கள் மற்றும் அவசர எச்சரிக்கைகள் போன்ற அதிநவீன மின்னணு தீர்வுகளை இந்தியா செயல்படுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு வேளாண் கடன் அட்டை திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மீன்வளத் துறைக்கு பல்வேறு காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் மீன்வள மேம்பாட்டில் அதன் பங்களிப்பை அங்கீகரித்து, அதன் தொழில்நுட்ப சலுகைகளுக்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தை அவர் பாராட்டினார்.
எஸ்.சதிஸ் சர்மா