புதுதில்லியில் நடைபெற்ற கூட்டுறவு அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்

புதுதில்லியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா, ‘கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகள் குறித்த’ கூட்டுறவு அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மத்திய கூட்டுறவுத்துறை இணையமைச்சர்கள் திரு கிருஷ்ண பால், திரு முரளிதர் மொஹோல், குழு உறுப்பினர்கள், கூட்டுறவு அமைச்சக செயலாளர் மற்றும் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டுறவு அமைச்சகம் நிறுவப்பட்டதிலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து குழு விவாதித்தது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய திரு அமித் ஷா, நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் கிராமப்புறங்களின் நலனுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடி தனி கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவி, ” “ஒத்துழைப்பின் மூலம் செழுமை” என்ற தாரக மந்திரத்தை அளித்ததாகக் கூறினார். வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் கிராமப்புறங்களின் செழுமை இரண்டும் ஒத்துழைப்பு மூலம் சாத்தியமாகும் என்று மோடி அரசு நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரத்திற்குப் பிறகு சில ஆண்டுகளுக்கு நாட்டில் கூட்டுறவு இயக்கம் வலுவாக இருந்தது, ஆனால் பின்னர் பெரும்பாலான மாநிலங்களில் அது பலவீனமடைந்தது என்று திரு. அமித் ஷா கூறினார். மத்தியில் கூட்டுறவு அமைச்சகம் அமைக்கப்பட்ட பிறகு, மாநிலங்களுடன் இணைந்து தொடக்க வேளாண் கடன் சங்கங்களின் தரவுத்தளத்தை உருவாக்கி, இரண்டு லட்சம் தொடக்க வேளாண் கடன் சங்கங்களைப் பதிவு செய்யும் செயல்முறையைத் தொடங்குவதே முதல் பணி என்று அவர் குறிப்பிட்டார். தொடக்க வேளாண் கடன் சங்கங்களை கணினிமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக திரு அமித்ஷா கூறினார். வரும் காலங்களில், நாட்டில் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் இல்லாத ஒரு பஞ்சாயத்து கூட இருக்காது என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டில் கூட்டுறவு வளர்ச்சியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாநிலங்களிலும் சீரான சமச்சீர் வளர்ச்சியைக் கொண்டுவர அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக திரு அமித் ஷா தெரிவித்தார்.

 நாட்டில் கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து குழு உறுப்பினர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். அத்துடன் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளை அவர்கள்  பாராட்டினர்.

Leave a Reply