ஃபிட் இந்தியா எனப்படும் உடல்திறன் இந்தியா இயக்கத்தின் முதன்மை நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘சண்டே ஆன் சைக்கிள்’ (ஞாயிறுகளில் மிதிவண்டியில் பயணம்) என்ற இயக்கம் இன்று காலை (16.02.2025) மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியாவில் நடைபெற்றது. சைக்கிள் ஓட்டுதல் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், மாசுபாட்டிற்கான தீர்வையும் இது ஊக்குவிக்கிறது. நாடு முழுவதிலுமிருந்து ஆரோக்கிய நிபுணர்கள், பல்வேறு சைக்கிள் கிளப்புகள், தனிப்பட்ட உடற்பயிற்சி ஆர்வலர்கள் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டுநர்கள் இதில் பங்கேற்றனர்.
மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தலைமை வகித்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். உடல் பருமன் பிரச்சினையை, குறிப்பாக நகர்ப்புற இளைஞர்களிடையே உள்ள உடல் பருமன் பிரச்சினையை எதிர்த்துப் போராட பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் விடுத்த அழைப்பிற்கு ஏற்ப ‘ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிள் ஓட்டும் இயக்கம்’ மும்பையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மாண்டவியா, நாட்டின் மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நமது பிரதமரின் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற பார்வையை அடைய முடியும் என்றார். ‘சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமைகள்’ என்ற இந்த முன்முயற்சி, பூஜ்ஜிய கார்பன் தடம் கொண்ட போக்குவரத்து முறையை ஏற்படுத்தி சுற்றுச்சூழலுக்கும் பங்களிப்பதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள், முடிந்தவரை சைக்கிள்களைப் பயன்படுத்துமாறு அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தொடங்கப்பட்ட சண்டே ஆன் சைக்கிள் முன்முயற்சி ஏற்கனவே இந்தியா முழுவதும் 3500 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. இன்று (பிப்ரவரி 16) இந்த நிகழ்வு 100 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.
திவாஹர்