ஆஸ்திரேலியாவிற்கு முதல் முறையாக இந்திய மாதுளம் பழங்கள் கடல்வழியாக ஏற்றுமதி: அபேடா முன்முயற்சி.

இந்தியாவின் விவசாய ஏற்றுமதியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா (APEDA) அமைப்பானது அக்ரா ஸ்டார், கே பீ எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, கடல் வழியாக உயர்தர  சங்கோலா, பாக்வா ஆகிய இந்திய மாதுளை ரகங்களை கடல்வழியாக முதல் முறையாக வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய விளைபொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்துவதில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

ஆஸ்திரேலியாவிற்கு மாதுளம் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள்  தொடர்பான ஒப்பந்தம் பிப்ரவரி 2024-ல் கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் சோலாப்பூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட 5.7 மெட்ரிக் டன் மாதுளைகள் முதல் முறையாக கடல் வழியாக சரக்கு கப்பல் மூலம் 2024 டிசம்பர் 6-ம் தேதியன்று, இந்தியாவிலிருந்து புறப்பட்டு 2025 ஜனவரி 13 அன்று சிட்னி சென்றடைந்தது.

இந்த ஏற்றுமதி உலகளாவிய சந்தைத் தரங்களை பூர்த்தி செய்வதில் இந்தியாவுக்கு உள்ள திறன்களை எடுத்துக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், புதிய வருவாய் வழிகளை ஏற்படுத்தி இந்திய விவசாயிகளுக்கு ஊக்கத்தையும் அளிக்கிறது.

அபேடாவின் தலைவர் திரு அபிஷேக் தேவ், இது குறித்து கூறுகையில், இந்தியாவின் விவசாய ஏற்றுமதி வேகமாக அதிகரித்து வருகிறது என்றும் பழங்கள் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 29% அதிகரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

சந்தை மேம்பாடு, உள்கட்டமைப்பு விரிவாக்கம், ஏற்றுமதி மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் அபேடா இந்திய விவசாயிகளையும் வேளாண் வர்த்தகங்களையும் ஆதரித்து ஊக்குவிக்கிறது. புதிய பழங்கள், காய்கறிகள், பாஸ்மதி அரிசி, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளிட்ட இந்தியாவின் விவசாய ஏற்றுமதிகள் தொடர்ந்து வலுவான வளர்ச்சியை எட்டி வருகிறது. இது உலகளாவிய விவசாய வர்த்தகத் துறையில் நாட்டின் நிலையை வலுப்படுத்துகிறது.

Leave a Reply