தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த நிர்வாக அகாடமியின் 30 காவல் அதிகாரிகளுக்கு 2025 பிப்ரவரி 13 அன்று புதுதில்லியில் சிறப்புப் பயிற்சியை நடத்தியது. சிறை நிர்வாகச் சூழலில் மனித உரிமைகள், சட்ட கட்டமைப்புகள் ஆகியவை குறித்த அவர்களது புரிதலை மேம்படுத்துவதையும்நீதியை நிலைநிறுத்துவதில் சீர்திருத்த அதிகாரிகளின் பங்கை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் திரு பரத்லால் தமது உரையில், இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளவர்கள் தங்களது பணியில் முன்மாதிரியாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதிகாரிகள் தங்கள் கடமைகளை வெறும் பணிகளாகக் கருதாமல், நெறிமுறைகளுடன் செயல்பட வேண்டும் என்றும் அடிப்படை மனித உரிமைகளை உறுதி செய்து, சட்டத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடல் அமர்வும் நடைபெற்றது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் லெப்டினன்ட் கர்னல் வீரேந்தர் சிங்கின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம், அனைத்து நிறுவனங்களிலும் மனித உரிமைகளை நிலைநிறுத்திப் பாதுகாக்கவும், தனிநபரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறது.
திவாஹர்