பஞ்சாப், உத்தராகண்ட், சத்தீஸ்கரில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024–25 நிதியாண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் / ஊரக உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் இந்த மானியங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பஞ்சாபின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, முதல் தவணையாக ரூ.225.1707 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியுடைய அனைத்து 22 மாவட்ட பஞ்சாயத்துகள், 146 வட்டார பஞ்சாயத்துகள், 13144 கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும். சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் மானியங்கள், 2024–25-ம் நிதியாண்டிற்கு 2-வது தவணையாக ரூ.237.1393 கோடியும், 2024–25 நிதியாண்டின் 1-வது தவணையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலுவைத் தொகை ரூ.6.9714 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளன.
உத்தராகண்டில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2024–25-ம் நிதியாண்டின் முதலாவது தவணையாக ரூ.93.9643 கோடி விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த நிதி தகுதியுள்ள 7,769 கிராம பஞ்சாயத்துகளுக்கும், தகுதியுடைய 995 வட்டாரப் பஞ்சாயத்துகளுக்கும், மாநிலத்தின் தகுதியுள்ள அனைத்து 13 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும் அளிக்கப்படும்.
எம்.பிரபாகரன்