இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இந்தியா-கத்தார் கூட்டு வணிக அமைப்பின் கூட்டம் நடைபெற்றது.

கத்தார் நாட்டின் அமீர் மேதகு ஷேக் தமீம் பின் ஹமாத் பின் கலிஃபா அல் தானியின் இந்தியப் பயணத்திற்கு (பிப்ரவரி 17-18) இடையில் மத்திய தொழில்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் ஒத்துழைப்புடன் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு இன்று (2025 பிப்ரவரி 18)  இந்தியா-கத்தார் கூட்டு வணிக அமைப்பின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் மத்திய  வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல், கத்தார் நாட்டின் தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ஷேக் ஃபைசல் பின் தானி பின் ஃபைசல் அல் தானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றிய திரு பியூஷ் கோயல், 2047 ஆண்டிற்குள் 30 முதல் 35 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் விருப்பத்தை வெளிப்படுத்தினார் .இது வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்தது என்றும் அவர் கூறினார். இந்தியாவும், கத்தாரும் வெற்றிகரமான எரிசக்தி வணிகத்தில் நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்வதோடு பெட்ரோலியப் பொருட்களுக்கு அப்பால் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், ஐஓடி, செமி கண்டக்டர்கள் போன்ற நவீன துறைகளிலும் கூட்டாண்மையை எதிர்காலத்தில் மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய கத்தார் அமைச்சர் ஷேக் ஃபைசல் பின் தானி பின் ஃபைசல் ட்அல் தானி, கத்தார்- இந்தியா இடையேயான நட்புறவு வெறுமனே பரிமாற்றத்தை மட்டுமே கொண்டதல்ல என்றும், பரஸ்பர மதிப்பு, பகிரப்பட்ட நலன்கள், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உறுதி ஆகியவற்றின் மீது கட்டப்பட்ட பாரம்பரியம் என்றும் கூறினார். பன்முகமான, ஆற்றல் கொண்ட, முதலீட்டாளர்களுக்கு உகந்த இடமாக கத்தார் விளங்குகிறது என்றும் அங்குள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள இந்திய முதலீட்டாளர்களுக்கு அன்பான அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழில் வர்த்தகத் துறை இணையமைச்சர் திரு ஜித்தின் பிரசாதா, கத்தார் நாட்டின் வெளிநாட்டு வர்த்தக விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் அகமது ஹல் சயீத், மத்திய தொழில்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இணைச் செயலாளர் திரு சஞ்சீவ், இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் திரு சஞ்சீவ் பூரி ஆகியோரும் இந்த கூட்டு கூட்டத்தில் உரையாற்றினர்.

Leave a Reply