நிலக்கரி அமைச்சகம் கொல்கத்தாவில் இன்று ‘நிலக்கரித் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் வர்த்தக நிலக்கரி சுரங்க ஏலம்’ குறித்த மக்கள் சந்திப்பு நிகழ்வுக்கு (ரோட் ஷோ)ஏற்பாடு செய்திருந்தது. நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் தலைமை விருந்தினராக் கலந்து கொண்டார். நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ரூபிந்தர் பிரார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்குதாரர்களுக்கு ஆதரவளிப்பதில் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். முற்போக்கான சீர்திருத்தங்கள் மற்றும் வெளிப்படையான கொள்கைகள் மூலம் நிலக்கரித் துறையை மாற்றுவதற்கான அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், தொழில்துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் உற்சாகமாக இதில் பங்கேற்று இருந்தனர்.
நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திருமதி ரூபிந்தர் பிரார் தனது வரவேற்புரையில், முதலீட்டு செயல்முறை முழுவதும் முதலீட்டாளர்களுக்கு ஆதரவளிக்கும் அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். இந்தத் துறையில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு நெறிப்படுத்தப்பட்ட அனுமதி நடைமுறைகள் மற்றும் தொடர்ச்சியான மேம்பாடுகளை அவர் வலியுறுத்தினார். வெளிப்படையான ஒழுங்குமுறை கட்டமைப்பு, விரைவான திட்ட ஒப்புதல்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் அனைத்து பங்குதாரர்களுக்கும் தடையற்ற முதலீட்டு பயணத்தை உறுதி செய்ய அமைச்சகம் தீவிரமாக உள்ளது என்று திருமதி பிரார் கூறினார். நிலக்கரி பயன்பாட்டு முறைகளை பல்வகைப்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதற்கும், சுரங்க செயல்திறனை மேம்படுத்துவதற்கும் நிலக்கரி வாயுமயமாக்கல் மற்றும் நிலத்தடி சுரங்கத்தை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முற்போக்கான கொள்கைகளையும் அவர் எடுத்துரைத்தார். நல்லாட்சியில் அமைச்சகத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் தனது முக்கிய உரையில், இந்தியாவின் நிலக்கரி வளங்களில் பயன்படுத்தப்படாத திறனை வெளிக்கொணர வேண்டும் என்ற அமைச்சகத்தின் தொலைநோக்கு பார்வையை எடுத்துரைத்தார். தற்போதைய சீர்திருத்தங்கள் எவ்வாறு நிலையான வளர்ச்சியை ஊக்குவித்து, அனைத்து பங்குதாரர்களுக்கும் பரஸ்பர நன்மைகளை வழங்குகின்றன, இந்தியாவின் நிலக்கரித் துறை பொருளாதார வளர்ச்சி மற்றும் எரிசக்தி பாதுகாப்பின் வலுவான உந்துதலாக இருப்பதை எப்படி உறுதி செய்கிறது என்பது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
தனியார் நிறுவனங்கள் சுரங்கத் தொழிலில் முதலீடு செய்வது மட்டுமல்லாமல், அவர்கள் செயல்படும் சமூகங்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காடு வளர்ப்பு, மறுசீரமைப்பு மற்றும் நலத்திட்ட முயற்சிகளில் புதிய வரையறைகளை அமைக்க சமூகத்திற்கு தொழில்துறை மிகவும் கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். “நமது வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், நமது முன்னேற்றம் மக்கள் மற்றும் பூமி கிரகம் இரண்டிலும் நீடித்த, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்” என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
தொழில்துறை தலைவர்கள், சாத்தியமான முதலீட்டாளர்கள், சுரங்க வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட பங்குதாரர்களுக்கு நுண்ணறிவுகளைப் பரிமாறிக் கொள்ளவும் கூட்டு வாய்ப்புகளை ஆராயவும் இந்த நிகழ்வு ஒரு தளமாக செயல்பட்டது.
எம்.பிரபாகரன்