நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதார திட்டத்தின் மைல்கல்லாக தேசிய உடல் கட்டமைப்பு இயக்க பரிசோதனை திட்டம் முன் எப்போதும் இல்லாத வகையில் ஐந்து உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இது முழுமையான சுகாதாரப் பாதுகாப்புக்கான நாட்டின் அர்ப்பணிப்புமிக்க செயல்பாடுகளையும், இயற்கை மருத்துவத்தின் மீது அதிகரித்து வரும் உலகளாவிய அங்கீகாரத்தையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையமானது தேசிய உடல் கட்டமைப்பு இயக்க பரிசோதனை திட்டத்தின் முதற்கட்ட நிறைவு விழாவை மும்பையில் 2025-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நடத்தியது.
ஐந்து அம்சங்களின் கீழ், இத்திட்டம் உலக சாதனைகளைப் படைத்துள்ளதாக கின்னஸ் உலக சாதனைக்கான மதிப்பீட்டாளர் திரு ரிச்சர்ட் வில்லியம்ஸ் ஸ்டென்னிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கான சான்றிதழை அவர் மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுஷ் சுகாதார அமைப்புகளின் வளர்ச்சியை எடுத்துரைத்தார். ஆயுர்வேதம் உள்ளிட்ட இயற்கை மருத்துவ நடைமுறைகளை விரிவுபடுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இத்திட்டத்தின் வெற்றிக்கு பங்களித்த அனைவரையும் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்