மைக்கா, குவார்ட்ஸ்,பாரைட்ஸ், ஃபெல்ஸ்பார் ஆகிய நான்கு கனிமங்கள் சிறு கனிமங்கள் பட்டியலிலிருந்து முக்கிய கனிமங்கள் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து சுரங்க அமைச்சகம் பிப்ரவரி 20 தேதியிட்ட அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய அரியவகை கனிமத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள முக்கிய அரிய வகை கனிமங்களை ஆராய்ந்து மீட்டெடுப்பதுடன் அவற்றை சுரங்கப்படுத்துவதை இந்த திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் மற்றும் மைக்கா ஆகிய தாதுக்கள், லித்தியம், நியோபியம், டைட்டானியம், போன்ற பல அரிய வகை கனிமங்களின் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன.
இந்தத் தாதுக்கள் ஆற்றல் மாற்றம், விண்கல உற்பத்தித் தொழில்கள், சுகாதாரத் துறை போன்றவற்றில் பயன்படுத்தப்படும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
குவார்ட்ஸ், ஃபெல்ஸ்பார் மற்றும் மைக்கா உள்ளிட்டவை சிறிய வகை கனிம பட்டியலில் உள்ள நிலையில் அவற்றை சுரங்க குத்தகைகார்கள் பிரித்தெடுக்கவோ, இருப்பு குறித்து அறிவிக்கவோ மாட்டார்கள்.
இதேபோல், பாரைட்ஸ் கனிமமானது ஆன்டிமனி, கோபால்ட், தாமிரம், ஈயம், மாங்கனீசு மற்றும் வெள்ளி ஆகியவற்றின் தாதுக்களுடன் இணைந்து காணப்படுகிறது.
இந்த கனிமங்களின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் திரு வி. கே. சரஸ்வத் தலைமையில் அமைக்கப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் தொடர்புடைய அமைச்சகங்களுக்கு இடையேயான குழு, இந்தக் கனிமங்களை சிறு கனிமங்களின் பட்டியலிலிருந்து முக்கிய கனிமங்களின் வகைக்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.
இதன் முலம் பல முக்கிய கனிமங்களின் ஆதாரமாக இருக்கும் இந்த அரிய வகை கனிமங்கள் குறித்த ஆய்வு மற்றும் சுரங்க பயன்பாடு அதிகரிக்கும்.
திவாஹர்