பாரம்பரிய இந்திய மருத்துவத் துறையில் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு அவர்களது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், மூன்று புகழ்பெற்ற மருத்துவர்களுக்கு நடப்பு ஆண்டிற்கான தேசிய தன்வந்தரி ஆயுர்வேத விருதுகளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் வழங்கியுள்ளது. 20.02.2025 அன்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ், மூன்று புகழ்பெற்ற மருத்துவர்களுக்கு இந்த விருதுகளை வழங்கினார்.
நாடி மருத்துவரும், எழுத்தாளருமான திரு வைத்யா தாரா சந்த் சர்மா, திரு வைத்ய மாயா ராம் யூனியல், அறுபது ஆண்டு கால சேவையுடன் புகழ்பெற்ற அறிஞரான தேசிய மாநாட்டின் நிறுவனர் திரு வைத்யா சமீர் கோவிந்த் ஜமதக்னி ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். இந்த விருதில் பாராட்டுப் பத்திரம், தன்வந்தரி உருவத்துடன் கூடிய கோப்பை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசு ஆகியவை அடங்கும். தேசிய தன்வந்தரி ஆயுர்வேத விருதுகள் பாரம்பரிய மருத்துவ அறிவைப் பாதுகாக்கும் அதே நேரத்தில், முழுமையான சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கின்றன.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், விருது பெற்றவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். “தேசிய தன்வந்தரி ஆயுர்வேத விருதுகள் உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பில் இந்தியாவின் மகத்தான பங்களிப்பை வெளிப்படுத்துகின்றன. இந்த விருதை பெற்றவர்கள் உலகளவில் ஆயுர்வேத மருத்துவ முறையை ஊக்குவிப்பதில் அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளனர்.
திவாஹர்