தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ
அமைப்பினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ-
ஜியோ), புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை
நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்தது.
தமிழக அரசு துறைகளில் உள்ள 3.50 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான
ஊக்க ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் விடுமுறை
எடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால் தற்காலிக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு
பாடம் கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 4 ஆண்டாக பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
அவ்வப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடி வருவதால் பணிகள்
பாதிக்கப்பட்டதற்கு காரணம் அரசின் மெத்தனப்போக்கே.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக சங்க
நிர்வாகிகளுடன் அரசின் சார்பில் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெறுவதும், விரைவில்
நிறைவேற்றப்படும் என கூறப்படுவதும், ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல்
மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறுவதும், ஆர்ப்பாட்டம் தொடர்வதும்
வாடிக்கையாகிவிட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுகிறது. இது
வேதனைக்குரியது. மேலும் இப்பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்படுவது அரசு ஊழியர்களும்,
ஆசிரியர்களும் அவர்களின் குடும்பங்களும் தான்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக முக்கியப்பேச்சுவார்த்தைக்கு
ஏற்பாடு செய்ய, அவர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு காண தமிழக அரசு முன்வர
வேண்டும். அதை விடுத்து கோரிக்கைகளுக்காகப் போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
மீது நடவடிக்கை எடுக்க நினைப்பது நியாயமில்லை.
எனவே தமிழக அரசு, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியான
பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை இனியும்
காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில்
கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா