இந்தியாவில் உற்பத்தி மற்றும் நிதிநுட்ப புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும் புத்தாக்கங்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையானது (டிபிஐஐடி), பேடிஎம் உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, புத்தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், உள்கட்டமைப்பு ஆதரவு, சந்தை அணுகல் மற்றும் நிதி வாய்ப்புகளை வழங்குவதுடன், அவற்றை ஊக்குவிக்கவும் பேடிஎம் உதவும். இந்த முயற்சி, தொழில்முனைவோரை அத்தியாவசிய வளங்களுடன் தயார்ப்படுத்துவதையும், அதிநவீன பணம் செலுத்துதல் மற்றும் நிதிநுட்பத் தீர்வுகளை உருவாக்கும் அவற்றின் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கூட்டாண்மை, வழிகாட்டுதல் மற்றும் புத்தாக்க வழிகாட்டுதல் மூலம் நிதிநுட்ப வன்பொருள் புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொழிற்துறை மற்றும் அரசு அமைப்புகளுடன் இணைந்து பயிலரங்கங்களுக்கு ஏற்பாடு செய்வதன் மூலமும் வழிகாட்டுதலை வழங்குவதன் மூலமும் ஒழுங்குமுறை மற்றும் இணக்க உதவியிலும் கவனம் செலுத்துகிறது. கூடுதலாக, இந்தக் கூட்டாண்மை உள்கட்டமைப்பு மற்றும் சந்தை அணுகல் ஆதரவை வழங்குகிறது. இது புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை பரிசோதிக்கவும், சரிபார்க்கவும், செம்மைப்படுத்தவும் உதவுகிறது. அதே நேரத்தில் பேடிஎம்-மின் விரிவான வணிகக் கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டிபிஐஐடி இயக்குநர் டாக்டர் சுமீத் குமார் ஜரங்கல், பேடிஎம் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் சர்மா ஆகியோர் இரு நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
திவாஹர்