தற்சார்பு இந்தியா இலக்கை அடைய இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என்று மக்களவை தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் தற்சார்பு இந்தியா இலக்கை அடைய இளைஞர்கள் உறுதியேற்க வேண்டும் என்று மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா இன்று வலியுறுத்தினார். புதிய இந்தியாவில் பல்வேறு துறைகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்ற தீர்மானத்தை அடைவதற்கு ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் இளைஞர்கள் முன்னோடியாக திகழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

புனே பாரதி வித்யாபீடத்தின் 26 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய திரு பிர்லா, நம் நாட்டு இளைஞர்கள் ஏற்கனவே தங்கள் அறிவு, திறன் மற்றும் ஞானத்தால் உலகை வழிநடத்தி வருவதாகக் குறிப்பிட்டார். வளர்ந்த நாடுகளின் வளமும் கூட அந்த நாடுகளில் உள்ள இந்திய இளைஞர்களின் பங்களிப்பின் விளைவாகும் என்று குறிப்பிட்டார்.

புதிய இந்தியா புதிய வாய்ப்புகளுடன் வளமான பாதையில் முன்னேறுகிறது என்று கூறிய திரு பிர்லா, இந்திய இளைஞர்கள், தங்கள் எதிர்காலத்திற்காக வளர்ந்த நாடுகளை எதிர்நோக்குவதற்கு மாறாக, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற தங்களது திறமை மற்றும் ஆற்றலை செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், பாரதி வித்யாபீடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திரு பிர்லா சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

Leave a Reply