நிலக்கரியைச் சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கேற்ப கடலோரப் பகுதிகளில் சரக்கு ரயில் போக்குவரத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் ரயில்-கடல்-ரயில் வழித்தடத் திட்டத்தை மேம்படுத்த மத்திய நிலக்கரி அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பன்முனைய சரக்கு போக்குவரத்து வழித்தடம் நிலக்கரியை சுரங்கங்களிலிருந்து துறைமுகத்திற்கும் பின்னர் அதனை இறுதி பயனர்களுக்கும் தடையின்றி கொண்டு செல்ல வகை செய்கிறது. அதே நேரத்தில் சரக்கு போக்குவரத்திற்கான செயல்திறனையும் மேம்படுத்துகிறது.
இந்தப் போக்குவரத்து வழித்தடத்தில் நிலக்கரி வெளியேற்றத்திற்கான கூடுதல் மாற்று வழிமுறையை மேம்படுத்துவதன் மூலம் அனைத்து ரயில் வழித்தடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன் நிலக்கரியைக் கையாள்வதில் குறைந்த கரியமில வாயு வெளியேற்றத்தையும் உறுதி செய்கிறது. கடலோரக் கப்பல் போக்குவரத்து முறையானது நாட்டின் சரக்குப் போக்குவரத்துத் துறையில் புரட்சி ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மத்திய நிலக்கரி அமைச்சகம் ரயில்வேயுடன் இணைந்து நிலக்கரியைக் கொண்டு செல்வதில் இந்த வழித்தடத்தைப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக, 2022-ம் நிதியாண்டில் 28 மில்லியன் டன்னாக இருந்த நிலக்கரிப் போக்குவரத்து 2024-ம் நிதியாண்டில் 54 மில்லியன் என்ற அளவில் இரட்டிப்பாகியுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா