அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளின் இரண்டு நாள் மாநாட்டை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று புது தில்லியில் தொடங்கியது. திரு ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். நிறுவப்பட்ட சட்ட கட்டமைப்பிற்குள் நாட்டில் தேர்தல் நிர்வாகத்தில் முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும் பல்வேறு தலைப்புகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களான டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகள் (சிஇஓ), மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (டிஇஓ), வாக்காளர் பதிவு அதிகாரிகள் (இஆர்ஓ), வட்டாரநிலையிலான அதிகாரிகள் (பிஎல்ஓ) உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றவும், அனைத்து சட்டப்பூர்வக் கடமைகளையும் அதாவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 & 1951; வாக்காளர் பதிவு விதிகள் 1960, தேர்தல் நடத்தை விதிகள் 1961 மற்றும் அவ்வப்போது இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை உறுதியுடன் நிறைவேற்றவும் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் தனது உரையில், அறிவுறுத்தினார்.
அரசியல் கட்சிகளுக்கு எளிதில் அணுகக்கூடியவர்களாகவும், பதிலளிக்கக்கூடியவர்களாகவும் இருக்குமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். தற்போதுள்ள சட்டப்பூர்வக் கட்டமைப்பிற்குள் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வுகாண, அனைத்து சட்டப்பூர்வ நிலைகளிலும் உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டங்கள்,சம்பந்தப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரியான இஆர்ஓ அல்லது டிஇஓ அல்லது சிஇஓ மூலம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு சிஇஓ-வும் மார்ச் 31, 2025 க்குள் அவர்கள் சம்பந்தப்பட்ட துணைத் தேர்தல் ஆணையருக்கு பிரச்சினை வாரியான நடவடிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
சட்டத்திலும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களிலும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளபடி, அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வட்டார நிலையிலான தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் தங்கள் பங்கினையும் பொறுப்புகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அரசியல் சட்டத்தின் பிரிவு 325 மற்றும் பிரிவு 326-ன் படி, 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். அனைத்து தேர்தல் அதிகாரிகளும் வாக்காளர்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொள்ள பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், அதே நேரத்தில் எந்தவொரு தேர்தல் ஊழியரோ அல்லது அதிகாரியோ தவறான கூற்றுகளைப் பயன்படுத்தி மிரட்டப்படுவதில்லை என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 800-1200 வாக்காளர்களைக் கொண்டிருக்கவும், ஒவ்வொரு வாக்காளரின் இல்லத்திலிருந்தும் 2 கி.மீ தூரத்திற்குள் வாக்குச் சாவடிகள் இருப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் வாக்களிப்பதை எளிதாக்குவதற்கு, முறையான, உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகளுடன் கூடிய வாக்குச் சாவடிகள் நிறுவப்பட வேண்டும். நகர்ப்புறங்களில் வாக்களிப்பை அதிகரிக்க, உயரமான கட்டிடங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வாக்குச் சாவடிகள் நிறுவப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
முதல் முறையாக ஒவ்வொரு மாநிலம்/யூனியன் பிரதேசத்திலிருந்தும் ஒரு மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் ஒரு வாக்காளர் பதிவு அதிகாரி மாநாட்டில் பங்கேற்றனர்.
எம்.பிரபாகரன்