சி-டாட் உருவாக்கியுள்ள கேரள காவல்துறையின் மேம்பட்ட சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்.

கேரள முதலமைச்சர் திரு பினராயி விஜயன், காணொலி மூலம் காவல் அமைப்புகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கான சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கேரள காவல்துறையின் இணையவழிப்  பிரிவின் “மேம்பட்ட சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையத்தை” திறந்து வைத்தார்

மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறையின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்), கேரள காவல்துறைக்கான இணையப் பாதுகாப்பு செயல்பாட்டு மையமான திரிநேத்ராவை  வடிவமைத்து உருவாக்கியுள்ளது.

சி-டாட்டின் திரிநேத்ரா தீர்வு என்பது செயற்கை நுண்ணறிவால் இயங்கும் உள்நாட்டு, ஒருங்கிணைந்த இணையப் பாதுகாப்பு தளமாகும். இது நிறுவனங்கள் மற்றும் முக்கியமான துறைகளின் இணைய பாதுகாப்பை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பாதிப்புகளை முன்கூட்டியே அடையாளம் காணுதல், முரண்பாடுகளைக் கண்டறிதல் மற்றும் குற்றங்களைத் தணித்தல் ஆகிய செயல்பாடுகளைக் கொண்டதாகும்.

காவல்துறை தலைமையகம், நகர ஆணையரகங்கள் மற்றும் அதனுடன் இணைந்த காவல் நிலையங்களில் கணினிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதில் மேம்பட்ட சைபர் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் கவனம் செலுத்தும். இந்த 24 மணி நேரமும் இயங்கும் மையமானது இணைய அச்சுறுத்தல் கண்காணிப்பு, பாதிப்புகளை அடையாளம் காணுதல் மற்றும் வலுவான தரவு பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும். இந்த முயற்சி கேரள காவல்துறையின் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதிலும், இணைய பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

Leave a Reply