தமிழக அரசு, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் நேற்று பெய்த மழையில் நெல்கொள்முதல் நிலையங்களில் இருந்த ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் நனைந்து வீணாகிவிட்டது.
விவசாயிகள் கடினமாக உழைத்து, கடன் வாங்கி பயிரிட்டு, அறுவடை செய்த நெல்மூட்டைகளை நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று வைத்தால், மழையில் நனைவது ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது. இது முறையல்ல.
தமிழகத்தில் டெல்டா மாவட்டமான நாகை மாவட்டப் பகுதியில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா குறுவை சாகுபடியில் சுமார் 1 லட்சத்து 80 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல்மூட்டைகள் நேற்று பெய்த மழையில் நனைந்து சேதமுற்றன.
பல நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்படும் நெல்மூட்டைகளை பாதுகாக்க தேவையான இடம், தார்ப்பாய்கள் ஆகியவற்றை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொள்ளாதது தான். அதாவது நெல்கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் பாதுகாப்பற்ற முறையில் சுமார் 30 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு, நேற்று பெய்த மழையில் நனைந்து முற்றிலும் சேதமுற்றன.
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதற்கு தமிழக அரசே பொறுப்பேற்று அதற்கான இழப்பீட்டை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எனவே தமிழக அரசு, டெல்டா உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளைப் பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நெல்மூட்டைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா