தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, தற்போது இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, இந்தியாவில் புதிய கண்டுபிடிப்புகள், உயிரி உற்பத்தி பொன்ற துறைகளின் வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்புக் குறித்து விவாதித்தனர். புத்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை விரிவுபடுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், மரபணு சிகிச்சை, தடுப்பூசி கண்டுபிடிப்பு, உயிரி தொழில்நுட்ப உற்பத்தி, இந்தியாவின் வளர்ந்து வரும் புத்தொழில் நிறுவனங்களின் சூழல் அமைப்பு ஆகியவை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்த உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். நாட்டில் உயிரி தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்வதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அப்போது அவர் எடுத்துரைத்தார். உயிரித் தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் போன்ற முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் இதற்கான சூழலை வளர்த்து வருகின்றன.
மைக்ராசாஃப்ட் இணை நிறுவனர் திரு பில் கேட்ஸ், இந்தியாவின் உயிரித்தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றங்கள் குறித்து பாராட்டுத் தெரிவித்து கோவிட்-19 உள்ளிட்ட தொற்று நோய்களுக்கான தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாகத திகழ்வதை ஒப்புக் கொண்டார். காசநோய், மலேரியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் உலகளாவிய சுகாதார முன்னேற்றங்களுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா