பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு நக்சலைட்டுகளுக்கு எதிராக கடுமையான அணுகுமுறையுடன் செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா கூறியுள்ளார்.
பாதுகாப்புப் படையினர் இரண்டு தனித்தனி நடவடிக்கைகளில் 22 நக்சலைட்டுகளை சுட்டுக் கொன்றுள்ளது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் ஒரு எக்ஸ் பதிவில், இன்று நமது வீரர்கள் ‘நக்சல் இல்லாத இந்தியா இயக்கத்தின்’ கீழ், மற்றுமொரு பெரும் வெற்றியை அடைந்துள்ளனர் என்று கூறியுள்ளார். சத்தீஸ்கரின் பிஜப்பூர் மற்றும் கான்கெரில் நமது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட இரண்டு வெவ்வேறு நடவடிக்கைகளில் 22 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறியுள்ளார். மோடி அரசு நக்சல்களுக்கு எதிராக கடுமையான அணுகுமுறையுடன் செயல்பட்டு வருகிறது. சரணடைவது முதல் சேர்த்துக்கொள்வது வரை அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்ட போதிலும் சரணடையாத நக்சலைட்டுகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை பின்பற்றுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சல் இல்லாத நாடாக இந்தியா மாறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், நக்சலிசத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையின் ஒரு பகுதியாக, 2025-ம் ஆண்டில் இதுவரை 90 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 164 பேர் சரணடைந்துள்ளனர். 2024-ம் ஆண்டில், 290 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர், 1090 பேர் கைது செய்யப்பட்டனர், 881 பேர் சரணடைந்தனர். இதுவரை மொத்தம் 15 முன்னணி நக்சல் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2004 முதல் 2014 வரை 16,463 நக்சல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இருப்பினும், 2014 முதல் 2024 வரையிலான மோடியின் ஆட்சிக் காலத்தில், வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 53 சதவீதம் குறைந்து, 7,744 ஆக குறைந்துள்ளது. இதேபோல், பாதுகாப்புப் படை வீரர்களின் இறப்பு எண்ணிக்கை 1851-லிருந்து 509 ஆக 73 சதவீதம் குறைந்தது. மேலும் பொதுமக்கள் இறப்பு எண்ணிக்கை 70 சதவீதம் குறைந்து, 4766 லிருந்து 1,495 ஆகக் குறைந்தது.
2014 வாக்கில், மொத்தம் 66 வலுவூட்டப்பட்ட காவல் நிலையங்கள் இருந்தன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை 612 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், 2014-ம் ஆண்டில், நாட்டில் 126 மாவட்டங்கள் நக்சலிசத்தால் பாதிக்கப்பட்டு இருந்தன. ஆனால் 2024-ம் ஆண்டில், அத்தகைய மாவட்டங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து 12 ஆக மட்டுமே உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், மொத்தம் 302 புதிய பாதுகாப்பு முகாம்களும், 68 இரவில் தரையிறங்கும் ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
திவாஹர்