தமிழக அரசு, டெல்டா உள்ளிட்ட பிற மாவட்டப் பகுதிகளில் தேவையான நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து சணல், தார்பாய் உள்ளிட்ட தேவையான தளவாட சாமான்கள் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு, டெல்டா உள்ளிட்ட பிற மாவட்டப் பகுதிகளில் தேவையான நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து சணல், தார்பாய் உள்ளிட்ட தேவையான தளவாட சாமான்கள் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

தமிழக அரசு, மாநிலத்தில் நடப்பு நெல்கொள்முதல் காலத்தில் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை கொள்முதல் செய்ய முறையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் நெல்கொள்முதல் அளவு குறைந்து வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் பொருளாதாரமின்மை, கடன்சுமை, தண்ணீர் பற்றாக்குறை, இயற்கைச்சீற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை என பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு முதலீடு கிடைப்பதே அரிதாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போதைய நடப்பு நெல்கொள்முதல் காலத்தில் விவசாயிகள் நெல்கொள்முதல் நிலையங்களுக்கு நெல்மூட்டைகளை கொண்டு செல்ல தேவையான நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்திருக்க வேண்டும். இந்த ஆண்டு காவிரியில் நீர் திறக்காததால் ஆழ்துளை கிணறுகள் மூலம் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடையை துவங்கியுள்ள நிலையில் இன்னும் சில மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக வருவாய் கிராமங்களில் அரசு நெல்கொள்முதல் நிலையங்களை கால தாமதமின்றி திறந்து, தாமதம் செய்யாமல் கொள்முதல் செய்ய வேண்டும். நாள்தோறும் கொள்முதல் வரம்பை அதிகப்படுத்திட வேண்டும்.

மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான சனல் இல்லாததாலும், நெல்லை பாதுகாப்பதற்கு போதுமான தார்பாய்கள் இல்லாததாலும், நெல்மூட்டைகளை முறையாக கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்துவதாலும் விவசாயிகள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சணல், தார்பாய் உள்ளிட்ட தேவையான தளவாட சாமான்கள் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விவசாயிகள் அறுவடை செய்துள்ள நிலையில் மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பிற மாவட்டங்களில் தேவையான எண்ணிக்கையில் நெல்கொள்முதல் நிலையங்களை திறந்து, நெல்மூட்டைகளை கொள்முதல் செய்து, பாதுகாத்து, உரிய விலையை காலத்தே கொடுக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாயத்தொழிலைப் பாதுகாக்க, விவசாயிகளுக்கு துணை நிற்க, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply