மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் செப்டம்பர் 6, 2024 அன்று, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், இறால் வளர்ப்பு மற்றும் மதிப்புச் சங்கிலியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் மீன்வள ஏற்றுமதி மேம்பாடு குறித்த பங்குதாரர் ஆலோசனைக்கு தலைமை தாங்கவுள்ளார். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்திற்கு உட்பட்ட மீன்வளத் துறை, இந்த ஆலோசனைக்கு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் திரு எஸ் பி சிங் பாகேல், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளின் மூத்த அதிகாரிகளுடன், பங்குதாரர்கள் ஆலோசனையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தியப் பொருளாதாரத்தின் முக்கியத்துறையான மீன்வளத் துறை, தேசிய வருமானம், ஏற்றுமதி மற்றும் உணவுப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ‘சூரியோதய துறை’ என்று அழைக்கப்படும் இது, சுமார் 30 மில்லியன் மக்களுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவளிக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளரான இந்தியா, 17.5 மில்லியன் டன் (2022-23-ல்) சாதனை உற்பத்தியை அடைந்தது. இது உலகளாவிய மீன் உற்பத்தியில் 8% பங்களிப்பாகும். நாட்டின் மொத்த மதிப்பு கூட்டலில் (GVA) 1.09% பங்களிப்பு மற்றும் விவசாய GVA க்கு 6.724% க்கும் அதிகமான பங்களிப்பு மூலம், இந்தத் துறையின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. மீன்வளத்துறையின் அபரிமிதமான வளர்ச்சித் திறனுடன், நிலைத்த, பொறுப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு, கவனம் செலுத்தும் கொள்கை மற்றும் நிதி ஆதரவு தேவைப்படுகிறது.
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், மீன்வள கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், நீலப்புரட்சி, பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் மூலம், 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.38,572 கோடி முதலீட்டுடன் மத்திய அரசு மீன்வளத் துறையில் மாற்றத்தை முன்னெடுத்து வருகிறது. இத்தகைய கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளின் விளைவாக, உலக மீன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தை வகிக்கிறது. குறிப்பிடத்தக்க ஏற்றுமதி சந்தைகளில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி, எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. 2023-24-ம் ஆண்டில் இந்தியா ₹60,523.89 கோடி மதிப்புள்ள 1.78 மில்லியன் டன் கடல் உணவுகளை அனுப்பியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இறால் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதியில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இறால் ஏற்றுமதி 2013-14 ஆம் ஆண்டில் ரூ .19,368 கோடியிலிருந்து சுமார் 107% அதிகரித்து ரூ .40,013.54 கோடியாக (2023-24-ல்) அதிகரித்துள்ளது. இது கடல் உணவு ஏற்றுமதியில், மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, இது கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 14% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் அதிகரித்துள்ளது.
மீன் வளர்ப்போர், மீனவர்கள், தொழில்துறையினர், கடல் உணவு ஏற்றுமதியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களிடையே கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, மீன்வள ஏற்றுமதி மேம்பாடு குறித்த பங்குதாரர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. புதுமை, நிலைத்தன்மை மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், உலகளாவிய கடல் உணவு சந்தையில், இந்தியாவின் நிலையை மேம்படுத்துவதையும், மீன் விவசாயிகள் மற்றும் கடலோர சமூகங்களுக்கு உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துவதையும் இந்த கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்கேற்பாளர்கள் சிறந்த நடைமுறைகள், நிலையான மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், கடல் உணவு ஏற்றுமதி மற்றும் அதன் மதிப்புச் சங்கிலியில் தடமறிதலை மேம்படுத்துவதற்கும் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த விவாதங்களில் ஈடுபடுவார்கள். உலகளாவிய கடல் உணவு சந்தைகளில் இந்தியாவின் தடத்தை விரிவுபடுத்துவதற்கான செயல் உத்திகளை வகுப்பதில், இந்த ஆலோசனை கவனம் செலுத்தும். இதன் மூலம் பல்வேறு வகையான மீன் / கடற்பாசி / கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி திறனை அதிகரிப்பதுடன், நாட்டின் லட்சக்கணக்கான மீனவர்கள், கடலோர சமூகங்கள் மற்றும் மீன் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிறது.
இந்த முன்முயற்சி, மீன்வளத் துறையை முன்னேற்றுவதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும், லட்சக் கணக்கான மக்களின் வாழ்வாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த கூட்டு அணுகுமுறையின் மூலம், மத்திய அரசு மீன்வளத் துறையில் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் பின்னடைவை ஊக்குவிக்க முயல்கிறது. இறுதியில் நாட்டின் நீலப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது.
எஸ்.சதிஸ் சர்மா