இந்தியா மற்றும் டென்மார்க்கின் கடல்சார் உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன, இரு நாடுகளும் நிலையான கடல்சார் நடைமுறைகளை மேம்படுத்த நெருக்கமாக செயல்படுகின்றன. இந்தியா-டென்மார்க் பசுமை உத்திசார்ந்த கூட்டாண்மையின் கீழ், தரமான கப்பல் போக்குவரத்து, துறைமுக கட்டுப்பாட்டில் ஒத்துழைப்பு, கடல்சார் பயிற்சி மற்றும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கடற்கொள்ளை, பசுமை கடல்சார் தொழில்நுட்பம், கப்பல் கட்டுதல் மற்றும் பசுமை கப்பல் போக்குவரத்து போன்ற முக்கிய துறைகளில் இந்த ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது. நிலையான கடல்சார் தொழில்நுட்பங்களில் உலகளவில் முன்னணியில் உள்ள டென்மார்க், சாகர்மாலா முன்முயற்சி மற்றும் கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030 ஆகியவற்றின் கீழ், இந்தியாவின் இலக்குகளுடன் இணைந்து, பசுமை மற்றும் டிஜிட்டல் தீர்வுகளில் தனது நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்கிறது.
2019-ல் கையெழுத்திடப்பட்டு, 2022-ல் மாற்றியமைக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம், இந்தியாவில் திறன்மிகு மையம் அமைப்பதற்கான பிரத்யேக பிரிவைச் சேர்ப்பதன் மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பசுமை கடல்சார் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவத்தை வலுப்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே அறிவுசார் பரிமாற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றின் உறுதிப்பாட்டை இது சுட்டிக் காட்டுகிறது. கூடுதலாக, துறைமுக டிஜிட்டல்மயமாக்கல், ஆட்டோமேஷன் மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவற்றில் டென்மார்க்கின் நிபுணத்துவம் நவீன துறைமுகங்களில் உலகளாவிய தலைமைத்துவமாக மாறுவதற்கான இந்தியாவின் தொலைநோக்கை அடைய உதவுவதில் கருவியாக உள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா