தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (30.9.2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய உரையில்,”வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன்னால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை என்பது இருந்தாலே, எந்தப் பாதிப்பையும் நாம் தடுத்திட முடியும். கடந்த மூன்று ஆண்டுகளாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்து வருகிறோம். அதேபோல, இது போன்ற கூட்டங்களையும் முறையாக நடத்திக் கொண்டு வருகிறோம்.
தென்மேற்கு மற்றும் வடகிழக்கு என இரண்டு பருவ காலங்களில் தமிழ்நாட்டிற்கு மழை கிடைக்கிறது. இதில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில், தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான மழை கிடைக்கிறது. முன்பெல்லாம் வடகிழக்கு பருவமழையானது பருவம் முழுவதும் பரவலாக பெய்து கொண்டிருந்தது. சமீப காலமாக காலநிலை மாற்றத்தால், சில நாட்களிலேயே மொத்தமாகப் பெய்து விடுகிறது. இன்னும் சொல்லப்போனால், சில மணி நேரங்களிலேயே பருவகாலத்திற்கான, மொத்த மழையும் கொட்டி தீர்த்து விடுகிறது. இதனை எதிர்கொள்வது தான் மிக மிக முக்கியமானதாக இருக்கிறது.
கே.பி.சுகுமார்