தில்லி கண்டோன்மென்டில் உள்ள மானெக்ஷா மையத்தில் 2024, அக்டோபர் 07 அன்று,டெஃப்கனெக்ட் 4.0ஐ பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தொடங்கிவைக்கிறார். இது உள்நாட்டு கண்டுபிடிப்புகளை முன்னேற்றுவதற்கும் நாட்டின் வளர்ந்து வரும் பாதுகாப்புச் சூழல் அமைப்பைக் கொண்டாடுவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க செயல்பாடாகும். பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் இயங்கும் பாதுகாப்புத் தளவாடக் கண்டுபிடிப்பு அமைப்பு (ஐடெக்ஸ்-டிஐஓ) இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
ஆயுதப்படைகள், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், ஸ்டார்ட்-அப்கள் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.க்கள்), கல்வியாளர்கள், இன்குபேட்டர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் டெஃப்கனெக்ட் 4.0, இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடக் கண்டுபிடிப்பு பயணத்தில் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.
இந்த நிகழ்வில் ஓர் அற்புதமான தொழில்நுட்பக் கண்காட்சி இடம்பெறும், இது பாதுகாப்புத் தளவாடக் கண்டுபிடிப்பு அமைப்பின் கண்டுபிடிப்பாளர்களுக்கு, அவர்களின் அதிநவீன தொழில்நுட்பங்கள், மேம்பட்ட திறன்கள் மற்றும் புதுமையான தயாரிப்புகளை வெளிப்படுத்துவதற்கான தனித்துவ வாய்ப்பை வழங்கும்..
சமீபத்திய பட்ஜெட் அறிவிப்புகள், பாதுகாப்பு கண்டுபிடிப்புச் சூழல் அமைப்புக்கான முக்கிய எடுத்துக்காட்டுகள், குறைகடத்தி களத்தில் சமீபத்திய முயற்சிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கருப்பொருள் அமர்வும் இந்த நிகழ்வில் இடம்பெறும்.
பாதுகாப்புத் தளவாடக் கண்டுபிடிப்பு அமைப்பு (ஐடெக்ஸ்) தற்போது 450 க்கும் அதிகமான ஸ்டார்ட்-அப்கள் / எம்.எஸ்.எம்.இ.களுடன் முக்கியமான திட்டங்களில் ஒத்துழைத்து வருகிறது. 2018 ஆம் ஆண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஐடெக்ஸ், பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் பல்வேறு பங்குதாரர்களுக்கு ஒருங்கிணைந்த தளத்தை தொடர்ந்து வழங்கி, 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பு செய்கிறது.
எஸ்.சதிஸ் சர்மா