முதலாவது பயிற்சி படைப்பிரிவின் இந்தியக் கடற்படைக் கப்பல்களான டிர் மற்றும் ஷர்துல், இந்தியக் கடலோரக் காவல்படை கப்பல் வீரா ஆகியவை 2024, அக்டோபர் 9 அன்று பயணத்தை நிறைவு செய்தன. நான்கு நாள் பயணத்தின் போது, இந்திய கடற்படை, ஓமனின் ராயல் கடற்படையுடன் பல்வேறு முனைகளில் ஈடுபட்டு, ஆழமான பிணைப்பை உருவாக்கி, இரு கடல்சார் நாடுகளுக்கு இடையே நட்பின் பாலங்களை வலுப்படுத்தியது.
தெற்கு கடற்படை காமாண்டின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீஃப் வி.ஏ.டி.எம் வி ஸ்ரீனிவாஸ் மற்றும் அதிகாரிகள் ஓமன் ராணுவத் தளபதிவி.ஏ.டி.எம் அப்துல்லா பின் காமிஸ் பின் அப்துல்லா அல் ரைசி, ஓமான் ராயல் கடற்படையின் தளபதி ஆர்.ஏ.டி.எம் சைஃப் பின் நாசர் பின் மொஹ்சென் அல்-ரஹ்பி ஆகியோரை சந்தித்தனர். பயிற்சி பரிமாற்றங்கள், பகிரப்பட்ட அறிவு மற்றும் கூட்டுப் பயிற்சிகள் மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த விவாதங்களில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பயணம் இரு கடற்படைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் உத்திசார் கூட்டாண்மை, அதிக ஈடுபாடு, இயங்குதன்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
இந்தியக் கடற்படை தூதுக்குழு சையத் பின் சுல்தான் கடற்படை தளத்தை பார்வையிட்டது. அங்கு கப்பல்கள், பராமரிப்பு பிரிவுகள், மருத்துவ அமைப்புகள் உட்பட பல்வேறு வசதிகள் பற்றி அறிந்தனர். சுல்தான் காபூஸ் கடற்படை அகாடமியில் உள்ள விளையாட்டு வளாகம் உட்பட பல்வேறு இடங்களையும் சிமுலேட்டர்களையும் பயிற்சியாளர்கள் பார்வையிட்டனர். பயிற்சியாளர்களுக்கு கடற்படை பராமரிப்பு பிரிவு, ஓமன் ராயல் கடற்படைக் கப்பல், அல் நசீர் ஆகியவற்றைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஓமன் சுல்தானகத்திற்கான இந்திய தூதர் திரு அமித் நரங் சுல்தானகத்தின் ஆயுதப்படை (நிர்வாகம் மற்றும் தளவாடங்கள்) உதவித் தலைவர் அலி அல் பலுஷி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஓமன் பிரமுகர்கள் மற்றும் பிற விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
திவாஹர்