பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2024, அக்டோபர் 12 அன்று, ரூ .2,236 கோடி செலவில் எல்லைச் சாலைகள் அமைப்பின் 75 உள்கட்டமைப்பு திட்டங்களை மெய்நிகர் முறையில் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 22 சாலைகள், 51 பாலங்கள் மற்றும் 2 திட்டங்கள் 11 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஜம்மு காஷ்மீரில் 19, அருணாச்சல பிரதேசத்தில் 18, லடாக்கில் 11, உத்தரகாண்டில் 9, சிக்கிமில்6, இமாச்சல பிரதேசத்தில் 5 , மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தானில் தலா 2, நாகாலாந்து, மிசோரம் ,அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தலா 1 திட்டம் அடங்கும்.
மேற்கு வங்கத்தின் சுக்னாவில் உள்ள திரிசக்தி படைப்பிரிவு தலைமையகத்தில் இருந்து பாதுகாப்பு அமைச்சர் இந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். ஜவஹர்லால் நேரு மார்க் மற்றும் ஜூலுக் அச்சுக்கு இடையிலான முக்கிய இணைப்பாக செயல்படும் சிக்கிமில் உள்ள குப்புப்-ஷெரதாங் சாலையின் திறப்பு முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
பாதுகாப்பு அமைச்சர் தனது உரையில், எல்லை உள்கட்டமைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவதற்கும், இந்த பகுதிகளின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கும் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு இந்த திட்டங்கள் சான்றாகும் என்று குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் நாட்டின் பாதுகாப்பு தயார்நிலையை மேம்படுத்துவதில் பெரிதும் உதவும் என்றும் அவர் கூறினார். ‘2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை இதுபோன்ற உள்கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் நனவாக்க முடியும் என்று அவர் கூறினார்.
இந்த 75 திட்டங்களைத் தொடங்கியதன் மூலம், எல்லைச் சாலைகள் அமைப்பு, 2024-ம் ஆண்டில் ரூ.3,751 கோடி செலவில் 111 உள்கட்டமைப்பு திட்டங்களை முடித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட அருணாச்சல பிரதேசத்தின் அதிநவீன சேலா சுரங்கப்பாதை போன்ற ரூ .1,508 கோடி மதிப்புள்ள 36 திட்டங்களும் இதில் அடங்கும். கடந்த ஆண்டு, எல்லைச் சாலைகள் அமைப்பின் ரூ .3,611 கோடி செலவிலான 125 உள்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
மிகவும் சவாலான நிலப்பரப்புகள் மற்றும் கடுமையான வானிலை நிலைமைகளில் கூட திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்ததற்காக பி.ஆர்.ஓ பணியாளர்களின் மன உறுதியையும் உறுதியையும் பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார், மேலும் அரசாங்கம், அதன் மூன்றாவது பதவிக்காலத்தில், எல்லை உள்கட்டமைப்பை மேலும் விரைவுடன் மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறினார். 2024-25 மத்திய பட்ஜெட்டில் எல்லைச் சாலைகள் அமைப்புக்கு ரூ.6,500 கோடி அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீடு பற்றிக் குறிப்பிட்ட அவர், இது ராணுவ உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பங்களிப்பது மட்டுமின்றி, வடகிழக்கு பிராந்தியம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எல்லைப் பகுதிகளின் மேம்பாடு நாட்டின் எதிரிகளால் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் அது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று 2014-க்கு முந்தைய அரசுகள் கருதியதாக பாதுகாப்பு அமைச்சர் கூறினார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எல்லை உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது முன்னுரிமை பகுதியாக உள்ளது. ஏனெனில் இந்தப் பிராந்தியங்கள், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள், சமூக-பொருளாதார மற்றும் ராணுவக் கண்ணோட்டங்களில் மிகவும் முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டார். “கடந்த தசாப்தத்தில், கிராமங்கள் முதல் நகரங்கள் வரை சாலைகளின் பரந்த வலையமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இதன் விளைவாக நாடு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது” என்று அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்