தமிழக அரசு வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு ஆகியவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடான நடவடிக்கைகளில் தொடர் கவனம் செலுத்த வேண்டும்!- ஜி‌.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு மாநிலத்தில் வடகிழக்குப் பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொது மக்களைப் பாதுகாக்க வேண்டும்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது.

இச்சூழலில் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளானது மக்களைக் காப்பாற்ற, பாதுகாக்க ஏதுவானதாக அமைய வேண்டும்.

அதற்கேற்றவாறு முன்னேற்பாடான நடவடிக்கைகளும் அவசியம். குறிப்பாக தாழ்வானப் பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பு மையங்களுக்கு மாற்றக்கூடிய நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.

வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டும்.

முடிவு பெறாமல், மூடப்படாமல் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் வடிகால் ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை தேவை.

மழையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கும் அதே வேளையில் பாதிக்கப்படும் மக்களுக்கு சுகாதார மையங்கள் உட்பட உணவு, தண்ணீர், இருப்பிடம் ஆகியவை தற்காலிக அவசியம்.

மேலும் பொது மக்களுக்கான குடிநீர் தரமானதாக இருப்பதையும், பொது மக்கள் சாலைப் போக்குவரத்தில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதையும் தொடர் நடவடிக்கைகள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மழைக்கால நோய்கள் பரவுவதில் இருந்து மக்களைப் பாதுகாக்க நோய்த்தடுப்பு உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே தமிழக அரசின் அனைத்து துறைகளும் வடகிழக்குப் பருவமழையான இக்காலத்தில் மழையினால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மக்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply