ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி ஜப்பான் பயணம்.

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி 2024 அக்டோபர் 14 முதல் 17 வரை ஜப்பானுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது இந்தியா, ஜப்பான் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாகும்.

2024 அக்டோபர் 14 அன்று, ஜெனரல் உபேந்திர துவிவேதி ஜப்பானுக்கான இந்திய தூதர் திரு  சிபி ஜார்ஜுடன் கலந்துரையாடுவார், அதன் பின்னர் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியா-ஜப்பான் உறவுகள் குறித்த விவாதத்தில் ஈடுபடுவார்.

2024 அக்டோபர் 15 அன்று  ஜப்பானின் மூத்த ராணுவத் தளபதியுடன் இச்சிகாயாவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் உரையாடல்களில் ஈடுபடுவார். கூட்டு தற்காப்புப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் யோஷிடா யோஷிஹைட் உடன் இந்த சந்திப்புகள் திட்டமிடப்பட்டுள்ளன.  இந்தியா, ஜப்பான் இடையே வலுவான ராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும். ஜெனரல் உபேந்திர துவிவேதி இச்சிகயாவின் பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார். மேலும் ஜப்பான் தரைவழி தற்காப்புப் படை (ஜே.ஜி.எஸ்.டி.எஃப்) அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கும். இந்த பயணத்திட்டத்தில் ஜே.ஜி.எஸ்.டி.எஃப்-ன் மூத்த உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலும்   தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தை பார்வையிடுவதும் அடங்கும்.

2024 அக்டோபர் 16  அன்று, ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி, ஜப்பான் தரைவழி தற்காப்புப் படையின் தலைமைத் தளபதி ஜெனரல் மோரிஷிதா யசுனோரியுடன், புஜி பள்ளிக்குச் செல்வார், அங்கு அவர் புஜி பள்ளியின் தலைமை கமாண்டர்  லெப்டினன்ட் ஜெனரல் கோடாமா யசுயுகியுடன் உரையாடுவார்.

2024 அக்டோபர் 17 அன்று, ராணுவத் தலைமைத் தளபதி ஹிரோஷிமாவுக்குச் செல்கிறார், அங்கு அவர் ஹிரோஷிமா அமைதிப் பூங்காவில் மலர் வளையம் வைத்து, மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்துவார்.

ஜெனரல் உபேந்திர துவிவேதியின் பயணம்  இந்தியா, ஜப்பான் ராணுவங்களுக்கு இடையிலான  ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.

Leave a Reply