இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு மகாரத்னா அந்தஸ்து: விண்வெளித் துறையில் இந்தியாவின் வளர்ச்சியை நோக்கியது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்), மதிப்புமிக்க மகாரத்னா அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரத்தைப் பெறும் இந்தியாவின் 14 வது மத்திய பொதுத்துறை நிறுவனமாக அது மாறியுள்ளது. நிதிச் செயலாளர் தலைமையிலான அமைச்சகங்களுக்கு இடையிலான குழு, அமைச்சரவை செயலாளர் தலைமையிலான உயர்நிலைக் குழு ஆகிய இரண்டின் பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த மேம்படுத்தலுக்கு நிதியமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் பயணம் 80 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. 1940, டிசம்பர் 23  அன்று பெங்களூரில் இந்துஸ்தான் ஏர்கிராஃப்ட் லிமிடெட் என்ற பெயரில் தொலைநோக்குப் பார்வையுடன்  வால்சந்த் ஹிராசந்த் என்பவரால் நிறுவப்பட்டது. 1941-ல் இந்திய அரசு இதில் ஒரு பங்குதாரராக மாறியது. 1942-ல் முழு நிர்வாகக் கட்டுப்பாட்டையும் ஏற்றுக்கொண்டது.

ஆரம்பத்தில், எச்ஏஎல் வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமங்களின் கீழ் விமானங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தியது. ஹார்லோ ட்ரெய்னர், கர்டிஸ் ஹாக் ஃபைட்டர் போன்ற மாதிரிகளை உற்பத்தி செய்தது. 1951-ம் ஆண்டில், எச்ஏஎல் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. எச்.டி -2 பயிற்சியாளர், எச்.எஃப் -24 ஜெட் ஃபைட்டர் (மாருத்) போன்ற விமானங்களை உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கத் தொடங்கியது.

 1964 ஆம் ஆண்டில், இந்துஸ்தான் ஏர்கிராஃப்ட் லிமிடெட், ஏரோநாட்டிக்ஸ் இந்தியா லிமிடெட் உடன் ஒன்றிணைந்தது. இதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காக “இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்” என்று பெயரிடப்பட்டது, இதனால் விமான வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி, ஓவர்ஹாலிங் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் மிகவும் வலுவான நிறுவனத்தை உருவாக்கியது.

இந்நிலையில்,1997-ம் ஆண்டு மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உலகளாவிய தலைவர்களாக மாறுவதற்கான பயணத்தில் போட்டித் திறன்களைக் கொண்ட மத்திய பொதுத் துறை நிறுவனங்களை அடையாளம் கண்டு ஆதரிப்பதற்காக ‘நவரத்னா’ திட்டத்தை அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ்,மூலதனச் செலவு, கூட்டு முயற்சிகள், மனிதவள மேலாண்மை ஆகியவற்றில் ‘நவரத்னா’ மத்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இந்த நிறுவனங்களில் பல அவற்றின் சகாக்களை விட கணிசமாக பெரிதாக வளர்ந்ததால், இந்திய பன்னாட்டு நிறுவனங்களாக மாறக்கூடிய திறன் கொண்டவற்றை அங்கீகரிக்க ‘மகாரத்னா’ என்ற புதிய வகைப்பாட்டிற்கான தேவை எழுந்தது. இந்த உயர் அந்தஸ்து மற்ற ‘நவரத்னா’ நிறுவனங்களை ஊக்குவிக்கிறது. பிராண்ட் மதிப்பை மேம்படுத்துகிறது. மேலும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கு அதிக அதிகாரங்களை ஒப்படைக்க அனுமதிக்கிறது. வளர்ச்சி மற்றும் சர்வதேச போட்டித்தன்மையை வளர்க்கிறது.

2023-24 நிதியாண்டில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ரூ.28,162 கோடி வருவாயையும் ரூ.7,595 கோடி நிகர லாபத்தையும் ஈட்டியது. இது இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமாக தனது நிலையை உறுதிப்படுத்தியது. நிதி சார்ந்த இந்த வெற்றி நிறுவனத்தின் உத்தி பூர்வ முன்முயற்சிகள் மற்றும் விண்வெளித் துறையில் அதன் முக்கிய பங்கிற்கு ஒரு சான்றாகும்.

மகாரத்னா அந்தஸ்தை அடைவது இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு மேம்பட்ட நிதி சுயாட்சியுடன் அதிகாரத்தையும் அளிக்கிறது. அரசின் முன் அனுமதி தேவைப்படாமல் குறிப்பிடத்தக்க முதலீட்டு முடிவுகளை எடுக்க இது உதவுகிறது. திட்ட அமலாக்கத்தை விரைவுபடுத்தவும், புதுமைகளை ஊக்குவிக்கவும், செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்தவும் இந்தத் தன்னாட்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply