கடற்படையின் செயல்பாட்டு ஆயத்த நிலையை மேம்படுத்த, தெலங்கானாவின் விகாராபாதில் மிகக் குறைந்த அலைவரிசை நிலையத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தெலங்கானாவின் விகாராபாதிற்குட்பட்ட தாமகுண்டம் காப்புக்காட்டில், இந்திய கடற்படையின் மிகக் குறைந்த அலைவரிசை (VLF) நிலையத்திற்கு  பாதுகாப்புத்துறை அமைச்சர்  திரு ராஜ்நாத் சிங் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிலையம் சுமார் 2,900 ஏக்கர் பரப்பளவில் 3200 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.  கடற்படையின் செயல்பாட்டு ஆயத்த நிலையை மேம்படுத்துவதற்கான இந்த நிலையம் கடல் சார் சூழல் சவால்களை எதிர்கொள்வதில் வலுவான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுத் திறனை உறுதி செய்யும். கடற்படையின் தகவல் தொடர்பு கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி நம்பகமான மற்றும் நீண்ட தொலைவிற்கான பாதுகாப்பான ஒலிபரப்பை மேற்கொள்வதில் இந்த நிலையம் முக்கியப் பங்கு வகிக்கும்.  

நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இந்த நிலையம், கப்பல்கள் / நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் கட்டுப்பாட்டு மையங்களுக்கும் இடையே பாதுகாப்பான மற்றும் நிகழ்நேர தகவல் தொடர்பு வசதிகளை உறுதி செய்யும் என்றார். ஆழ்கடல் பகுதியில் இந்தியா தொடர்ந்து வலிமையான சக்தியாகத் திகழ்வதற்கு, அதி நவீன மற்றும் குறைபாடில்லாத தகவல் தொடர்பு அமைப்புகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதிக்கு மிகப் பெரிய உத்தரவாதமாக இந்தியக் கடற்படை திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.  கடல்சார் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி என்று கூறிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்ட அனைத்து நட்பு நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஒரு நாடு இது போன்ற முயற்சியிலிருந்து விலகிச் சென்றாலும் அது பாதுகாப்புச் சக்கரத்தை உடைத்து விடும் என்று குறிப்பிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர், கடல்சார் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி என்றும் வலியுறுத்தினார்.

தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார், கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave a Reply