மழை பெய்யும் பகுதிகளில் பொது மக்களுக்கு த.மா.கா வினர் உதவிக்கரம் நீட்ட வேண்டும்!- ஜி.கே.வாசன்‌ வலியுறுத்தல்.

தமிழக அரசு வடகிழக்குப் பருவமழையின் பாதிப்பில் இருந்து பொது மக்களை பாதுகாக்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நேற்றைய நிலவரம் படி வடதமிழகத்தில் சராசரியாக 150 மி.மீ. மழை பெய்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் நேற்று வரை இயல்பைவிட 84 சதவீதம் மழை பெய்துள்ளது.

கனமழையால் மக்கள் ஆங்காங்கே பாதிக்கப்படுவதை அறிவோம். இன்னும் பல மாவட்டங்களிலே மழையால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. இச்சூழலில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் சில பகுதிகளில் அதி கனமழை பெய்ததாலும், பல்வேறு மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழையாலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும், கடைகளிலும் தண்ணீர் புகுந்திருக்கிறது. பல இடங்களிலே போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக இன்னும் 2, 3 நாட்களுக்கு அவ்வப்போது மழை அதிகமாக பெய்ய வாய்ப்பிருப்பதால் மழையை சமாளிக்கும் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும், விரைவுப்படுத்த வேண்டும்.

சென்னையிலும் சரி, மழை பாதிப்பு ஏற்படும் மற்ற மாவட்டங்களிலும் சரி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் பணியாகும். மழையால் நோய் பரவாத வகையில் சுகாதாரத்துறையின் பணிகள் அமைய வேண்டும்.

தாழ்வான பகுதியில் உள்ள மக்களை அரசின் பாதுகாப்பு மையங்களில் வைத்திருக்கும் அரசு இயல்பு நிலை திரும்பும் வரை தொடர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பு, உணவு, குடிநீர் உள்ளிட்ட அவசியத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன். மேலும் மழை பெய்யும் பகுதிகளில் பொது மக்களின் பாதுகாப்புக்கு த.மா.கா வினர் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply