இந்தியாவின் முதலாவது விமான நிலையம் சார்ந்த தானியங்கி உள்ளரங்க காற்றுத் தர கண்காணிப்பு வசதியை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்தியாவின் முதலாவது விமான நிலையம் சார்ந்த தானியங்கி உள்ளரங்க காற்றுத் தர கண்காணிப்பு வசதியான பவன சித்ராவை  திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

சி.எஸ்.ஐ.ஆர் – என்.ஐ.ஐ.எஸ்.டி-யால், உள்ளூரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து வடிவமைக்கப்பட்ட உள்நாட்டு உட்புற சூரிய மின்கலங்களால் காற்று தர மானிட்டர் இயக்கப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி பயோடெக்னாலஜி மைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கவுன்சில்-ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மையம் மற்றும் சுதேசி அறிவியல் இயக்கம்-கேரளா ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் பயனாளிகளான 300 எஸ்சி / எஸ்டி விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர், உயிரி தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறினார்.

அடுத்த தொழில் புரட்சிக்கு இந்தியா தற்போது தயாராகி வருவதாகவும், பயோ இ3 கொள்கை போன்ற முயற்சிகள் அதற்கு உதவும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார். உயிரி தொழில்நுட்பம், விண்வெளி, வேளாண் துறைகளுக்கு முதன்மை முக்கியத்துவம் அளித்து இந்தியா உலகளவில் உயர வேண்டிய நேரம் இது. நமது விவசாயிகள் பயிரிட்டுள்ள பொருட்களுக்கு எவ்வாறு மதிப்புக் கூட்டுவது என்பது குறித்து ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறினார். திருவனந்தபுரத்தை இந்தியாவின் அறிவியல் தலைநகரம் என்றும் மத்திய அமைச்சர் வர்ணித்தார்.

அறிவியல் பாரம்பரிய திட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட இரண்டு புத்தகங்களை அமைச்சர் வெளியிட்டார். பழங்குடி பாரம்பரிய திட்டத்தின் கீழ் ஆறு சமூக திட்டங்களையும் அமைச்சர் தொடங்கி வைத்து, இந்த நிகழ்வில் விருது பெற்ற விவசாயிகளை கௌரவித்தார். விழாவுக்கு தலைமை வகித்த ராஜீவ் காந்தி உயிரி தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் சந்திரபாஸ் நாராயண் மத்திய அமைச்சருக்கு நினைவு பரிசளித்தார்.

முன்னாள் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன், வி.எஸ்.எஸ்.சி இயக்குநர் டாக்டர் எஸ்.உன்னிகிருஷ்ணன், சி.எஸ்.ஐ.ஆர்-என்.ஐ.எஸ்.டி இயக்குநர் சி. அனந்த ராமகிருஷ்ணன், சுதேசி அறிவியல் இயக்கம்-கேரளா தலைவர் திரு கே.முரளீதரன், செயலாளர் ராஜீவ் சி நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply