ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் கடற்கரையில் டானா சூறாவளி ஏற்படுத்தக் கூடிய கடுமையான தாக்கத்தை சமாளிக்க, இந்திய கடற்படை மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.
கிழக்கு கடற்படை தலைமையகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள கடற்படை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, விரிவான பேரிடர் மீட்பு செயல்முறையை வகுத்துள்ளது.
மாநில நிர்வாகங்கள் கோரினால், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கவும், உணவுப் பொருட்கள் மற்றும் இதரப் பொருட்களை வழங்கவும் கடற்படை தயாராக உள்ளது. கடற்படை மருத்துவமனையான ஐ.என்.எச்.எஸ் கல்யாணி மற்றும் இதர பிரிவுகளுடன் தலைமையகம் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது.
இந்த முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களுக்கு அத்தியாவசிய ஆடைகள், குடிநீர், உணவு, மருந்துகள் மற்றும் அவசர நிவாரணப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் சாலை வழியாக அனுப்பி வைக்கப்படும்.
மேலும், தேவைப்பட்டால் ஒருங்கிணைந்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவ வெள்ள நிவாரண மற்றும் நீச்சல் வீரர் குழுக்கள் அனுப்பப்படும்..
கடலில் மேற்கொள்ளப்படும்நிவாரண முயற்சிகளுக்கு உதவியாக, கிழக்கு கடற்படையின் இரண்டு கப்பல்கள் பொருட்கள், மீட்பு மற்றும் டைவிங் குழுக்களுடன் தயாராக உள்ளன.
இந்தியக் கடற்படை தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், அதிக எச்சரிக்கையுடனும் உள்ளது. சிவில் அதிகாரிகளுக்கும் டானா சூறாவளியால் பாதிக்கப்படும் மக்களுக்கும் தனது உதவியை வழங்க கடற்படை தயாராக உள்ளது.
எம்.பிரபாகரன்