ராய்ப்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் (எய்ம்ஸ்) 2-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (அக்டோபர் 25, 2024) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், எய்ம்ஸ் மருத்துவமனைகள் குறைந்த செலவில் சிறந்த மருத்துவ சேவைகளையும், மருத்துவக் கல்வியையும் வழங்குவதில் பெயர் பெற்றவை என்றார். மக்களின் நம்பிக்கை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் தொடர்புடையது. அதனால்தான் எய்ம்ஸில் சிகிச்சை பெற எல்லா இடங்களிலிருந்தும் ஏராளமானோர் வருகிறார்கள் என்று அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளிலேயே ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை நற்பெயரை ஈட்டியுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ சிகிச்சை மற்றும் பொது நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பற்றி அவர் தமது உரையில் குறிப்பிட்டார். வரும் காலங்களில், இந்த நிறுவனம் மக்கள் நலப் பணிகளில் மேலும் விரிவடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மருத்துவர்களிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், வசதி படைத்தவர்களுக்கு பல வாய்ப்புகள் இருக்கலாம், ஆனால் பின்தங்கிய மக்களின் நம்பிக்கை உங்கள் மீதே உள்ளது என்று கூறினார். அனைத்து மக்களுக்கும், குறிப்பாக ஏழைகளுக்கும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
மருத்துவ நிபுணர்களின் பணி மிகவும் பொறுப்பானது என்று மருத்துவர்களிடம் கூறிய குடியரசுத்தலைவர் அவர்களின் முடிவுகள் பெரும்பாலும் உயிர்களைக் காப்பாற்றுவது தொடர்பானவை என்றார். மருத்துவ நிபுணர்களாக, அவர்கள் பெரும்பாலும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இந்த சவால்களை எதிர்கொள்ள தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
எம்.பிரபாகரன்