ஊடகங்களுடனான ஒரு விவாதத்தில், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார். இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பத் துறைகளின் மேம்பாட்டுக்கான அரசின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக் காலத்தில் அறிவியல் வளர்ச்சியானது, வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
விண்வெளி புத்தொழில்களை ஆதரிப்பதற்காக ரூ. 1,000 கோடி துணிகர மூலதன நிதியைத் தொடங்குவது முதல் உயிரி பொருளாதாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பயோ இ3 கொள்கையை அறிமுகப்படுத்துவது வரை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களில் முக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த முன்முயற்சிகள் இந்தியாவின் அறிவியல் வலிமையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், தொழில்துறையில் நிலையான, சுயசார்பு பொருளாதாரத்திற்கும் பங்களிக்கும் என்று அமைச்சர் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் நம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். சந்திரயான் -3 போன்ற சாதனைகளிலிருந்து இந்தியா பெற்றுள்ள உலகளாவிய அங்கீகாரத்தை அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயண முயற்சியான ககன்யான் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.