சென்னை உயர்நீதிமன்ற அறைகள் அனைத்திலும் காணொலிக் காட்சி வசதிகள் செய்யப்படவுள்ளன.

தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய நீதித்துறையில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தின் அடிப்படையில், இந்திய நீதித்துறையின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சிக்கான மின்னணு நீதிமன்ற குறிக்கோள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  நீதித்துறை, உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழுவுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டம் 2011-2015-ம் ஆண்டு காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. திட்டத்தின் இரண்டாம் கட்டம் 2015-2023-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. மின்னணு நீதிமன்றங்கள் இயக்க திட்டத்தின் முதற்கட்டத்தில், 488 நீதிமன்ற வளாகங்கள் மற்றும் 342 தொடர்புடைய சிறைச்சாலைகளுக்கிடையே காணொலி காட்சி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், வட்ட அளவிலான நீதிமன்றங்கள் உட்பட அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும் தலா ஒரு காணொலி காட்சி உபகரணமும், கூடுதலாக 14,443 நீதிமன்ற அறைகளுக்கு கூடுதல் காணொலிக் காட்சிக் கருவிகள் வழங்கவும் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 2506 காணொலிக் காட்சி அறைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3240நீதிமன்ற வளாகங்களுக்கும், 1272 சிறைச்சாலைகளுக்கும் இடையே காணொலிக் காட்சி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கீழ்நிலை நீதிமன்றங்களின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.7210 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் 3 ஆம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை 2023 செப்டம்பரில் நான்கு ஆண்டு காலத்திற்கு (2023 முதல்) ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ், 500 சிறைச்சாலைகள், 700 மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் 9000 நீதிமன்றங்கள் உட்பட 10200 நிறுவனங்களில் காணொலி காட்சி உட்கட்டமைப்பு வசதிகளை ரூ.228.48 கோடி செலவில் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 1,169 நீதிமன்ற அறைகளில் 267 நீதிமன்ற அறைகளில் ஏற்கனவே காணொலிக் காட்சி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 902 நீதிமன்ற அறைகளில் காணொலிக் காட்சி வசதிகள் செய்யப்பட உள்ளன.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு அர்ஜுன் ராம் மேக்வால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Leave a Reply