இந்தியாவின் வர்த்தகச் சூழல் குறித்த நுண்ணறிவுத் திறன்களைப் பெறுவதற்கும், முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்கும், இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் எளிதாக வர்த்தகம் செய்தல் மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் இணையதளத்தை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற 2-வது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை – இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் இந்த இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ஆகிய இரண்டின் எளிதாக வணிகம் செய்வதற்கான முக்கிய முயற்சிகள் குறித்த நிலை மற்றும் புதுப்பிப்புகளை வழங்க இந்த இணையதளம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு கோயல், மத்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சியில் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும், வர்த்தகர்கள் மற்றும் குடிமக்களின் வாழ்க்கையை சிறப்பானதாகவும், எளிதாகவும் மாற்ற முயற்சித்து வருவதாகவும் கூறினார். பணி புரிவதற்கான புதிய சிந்தனைகளை அளிக்குமாறு தொழில்துறை மற்றும் மாநில அரசுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
முதலீட்டாளர்கள் தங்கள் வர்த்தகத் தேவைகளுக்கு ஏற்ப ஒப்புதல்களைப் பெறுவதற்கான அரசின் தேசிய ஒற்றைச் சாளர அமைப்பின் வழிகாட்டியில் தொழில்துறையிடமிருந்து உள்ளீடுகள் தேவை என்று அமைச்சர் வலியுறுத்தினார். தொழில்துறை தேசிய ஒற்றைச் சாளர அமைப்பில் ஈடுபடாவிட்டால், அதன் மூலம் உரிமங்களைப் பெறாவிட்டால், அது குறித்து மத்திய அரசுக்கும் தொழில்துறை நில தொகுப்புக்கு உள்ளீடுகளை வழங்காவிட்டால், இந்த முயற்சி வெற்றி பெறாது என்று அவர் மேலும் கூறினார்.
திவாஹர்