அரபிக்கடலில் இலங்கை நாட்டு கொடியுடன் கூடிய படகு ஒன்றில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக அந்நாட்டு கடற்படையால் தெரிவிக்கப்பட்ட தகவலின் பேரில் இந்திய கடற்படை துரிதமாக மேற்கொண்ட நடவடிக்கையில் அந்தப் படகு தடுக்கப்பட்டு போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான தகவல் மையத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான நீண்ட தூர ரோந்து விமானங்கள் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கைகளில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலும் ஈடுபடுத்தப்பட்டது.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து வழங்கப்பட்ட தகவலின் பேரில் ரோந்து விமானங்கள் மூலம் இரண்டு படகுகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு அவை இடைமறிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் 500 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை கடற்படை அதிகாரியிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கை இரு நாடுகளின் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் கடற்படையின் கூட்டு செயல்பாடுகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா