இந்திய வருவாய் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) பயிற்சி அதிகாரிகள் இன்று (2024 டிசம்பர் 2) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்தனர்.
அதிகாரிகளிடையே உரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்திய வருவாய் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) சீரான வரி முறை மற்றும் பகிரப்பட்ட நிர்வாக மதிப்புகள் மூலம் நமது பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது என்று கூறினார். இந்த சேவையானது நாட்டின் வரி நிர்வாகத்தில் சீரான தன்மையை ஊக்குவிக்கிறது என்றும் அவர் கூறினார். ஐஆர்எஸ் அதிகாரிகள் மத்திய அரசு, வணிகம் மற்றும் பல்வேறு மாநிலங்களின் வரி நிர்வாகங்களுக்கு இடையே மிக முக்கியமான இணைப்பாக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் மாறி வரும் சமூக – பொருளாதார சூழ்நிலையில், நாட்டின் நலன் பெரும்பாலும் சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பின் மூலமே தீர்மானிக்கப்படுகிறது என்று குடியரசுத்தலைவர் கூறினார். ஐஆர்எஸ் அதிகாரிகள் நாட்டின் பொருளாதார எல்லைகளின் பாதுகாவலர்கள் என்றும் அவர்கள் எப்போதும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று அவர் அதிகாரிகளிடம் கூறினார். மற்ற நாடுகளுடனான வர்த்தக வசதி ஒப்பந்தங்களில் அவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்திய வருவாய் சேவை (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பை உருவாக்குதல், சமூக-பொருளாதார திட்டங்களை செயல்படுத்துதல், கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்குதல் போன்றவற்றுக்கு வளங்களை பயன்படுத்த நாட்டிற்கு உதவுகிறது என்று குடியரசுத்தலைவர் கூறினார்.
திவாஹர்